ஊரடங்கு தளர்விற்கு பின் ஓசூர் ரோஜா, ஜெர்பரா விலை கிடுகிடு உயர்வு; மலர் சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி

ஓசூர்: ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு,. உற்பத்தி செய்யப்படும் கொய்மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதன் எதிரொலியாக ஓசூர் பகுதியில் பல லட்சம் மதிப்பில் சாகுபடி செய்யப்பட்ட கொய் மலர்களான ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட பூக்களை விற்பனை செய்ய முடியாமல் சாகுபடியாளர்கள், வியாபாரிகள் தவிப்பிற்குள்ளாகினர்.

மேலும், கொரோனா காலத்தில் வருமானம் இன்றி ரோஜா தோட்டங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், தோட்டங்களை பராமரிக்க முடியாமலும் செடிகளை அழிக்கும் நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். இதனால், பல லட்சம் மலர்கள் குப்பைக்கு சென்றது. மலர் சாகுபடி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. தற்போது கொய்மலர் சாகுபடி மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. ரோஜா, ஜெர்பரா மலர்களுக்கு சந்தைகளில் நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு ரோஜா ரூ.25க்கும், 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.500க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு ஜெர்பரா மலர் ரூ.15க்கும், 20 மலர்கள் கொண்ட கட்டு ₹300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழா நாட்களில் அதிகபட்சமாக ரோஜா மலர்கள் ஒரு கட்டுக்கு ரூ.150க்கும், ஜெர்பரா மலர்கள் ஒரு கட்டு ரூ.40க்கும் விலை போயுள்ளது.

இதுபோன்ற விலை உயர்வு வரலாற்றில் எப்போதும் இல்லாதது என மலர் சாகுபடி விவசாயிகள் கூறுகின்றனர். நவம்பர் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களும், கோயில் விழாக்களும் அதிக அளவில் வர உள்ளதால் ரோஜா, ஜெர்பரா போன்ற கொய் மலர்களின் தேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், கொரோனா காலத்தில் தோட்டங்கள் அழிக்கப்பட்டதால் மலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி ஹரிஷ் கூறுகையில், கொய் மலர் தோட்டங்களில் மலர்கள் மிகவும் குறைவாக கிடைப்பதால் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் மலர் விவசாயிகள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும், விலை அதிகரித்த நேரத்தில் தோட்டத்தில் மலர்கள் இல்லாதது வேதனையக்குள்ளாகியுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கொய் மலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதனை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, உள்நாட்டு மலர் சாகுபடியாளர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்து மலர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: