கூகுள், டிவிட்டர், பேஸ்புக் சிஇஓ.க்கள் அதிர்ச்சி உங்களை யாரய்யா வேலைக்கு எடுத்தது?: அமெரிக்க செனட் எம்பி கேள்வி

வாஷிங்டன்: அமெரிக்க செனட் குழுவின் விசாரணைக்கு ஆஜரான கூகுள், டிவிட்டர், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம், `உங்களை யார் வேலைக்கு எடுத்தது?’ என்ற அதிர்ச்சி கேள்வி கேட்கப்பட்டது.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் குறித்து போலி செய்திகள், தவறான தகவல்கள்  பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக, குடியரசு கட்சியும், அதிபர் டிரம்்பும் குற்றச்சாட்டுகளை கூறினர். இதை கட்டுப்படுத்த செனட் சபையின் வர்த்தக குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், பொய் தகவல்கள் பரப்பப்படுவது பற்றி விளக்கம் அளிக்கும்படி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டிவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி, பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் ஆகியோருக்கு அமெரிக்க செனட் குழு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது, பல்வேறு கேள்விகளை கேட்டு ஜனநாயகக் கட்சியினரும் ,குடியரசுக் கட்சியினரும் அவர்களை துளைத்தனர்.

அப்போது, டோர்சி, ``தகவல்களை அளிப்பது மட்டுமே டிவிட்டரின் வேலை. அந்த தகவல்கள் தேர்தலில் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி எனக்கு கவலையில்லை,’’ என்றார். இதை கேட்டு ஆத்திரமடைந்த குடியரசு கட்சியின் டெக்சஸ் எம்பி. டெட் குரூஸ், ``உங்களை எல்லாம் யார் வேலைக்கு எடுத்தது? ’’ என ஆவேசமாக கேட்டார். இதை கேட்டு 3 சிஐஓ.க்களும் அதிர்ந்தனர். அதே நேரம், ‘எந்த விதமான அரசியல் நிலைப்பாடும் இல்லாமல், கூகுள் தனது பணியை செய்து வருகிறது,’’ என்று சுந்தர் பிச்சை விளக்கம்  அளித்தார். `சமூக வலைதள கட்டுப்பாடுகள் தொடர்பாக சட்டம் தேவை’ என்று ஜூகர்பெர்க் தெரிவித்தார். மேலும், வரும் அதிபர் தேர்தலை பாதுகாக்கும் விதத்தில், முரணான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

Related Stories: