பெங்களூரு: கர்நாடக தொழில் அதிபரிடம் 7.20 கோடி மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், கேரளா மாநிலம் கோவளத்தில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கப்பன் பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட் ரமணி. தொழில் அதிபரான இவரிடம் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் அவரது நண்பர்கள், 360 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். குறைந்த வட்டி மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறிய அவர்கள், பணத்தை பெறுவதற்கு முன்பாக 7.20 கோடி சேவை கட்டணமாக வழங்கவேண்டும். அதாவது வழங்கப்படும் கடன் தொகையில் 2 சதவீதம், சர்வீஸ் சார்ஜ் தொகையாக வழங்கவேண்டுமென்று கூறியுள்ளனர். இதை ஏற்ற வெங்கட்ரமணி, ஹரி நாடாரின் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு 7.20 கோடியை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்ற அவர் 360 கோடி கடன் தொகையை பெற்றுத்தரவில்லை. பல நாட்கள் காத்திருந்த வெங்கட்ரமணி உடனே ஹரி நாடார் மற்றும் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு, கடன் தொகை வழங்குங்கள் இல்லையென்றால், கொடுத்த 7.20 கோடி பணத்தை திரும்ப தாருங்கள் என்று கேட்டுள்ளார்.இதற்கு ஹரி நாடார் தரப்பினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கட்ரமணி உடனே பெங்களூரு கப்பன் பார்க் துணை மண்டல போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் விதான சவுதா போலீசாரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்தனர். அதையேற்று விதான சவுதா போலீசார் ஹரி நாடார், ஜெகதீஷ், சுப்பிரமணியா, பாஸ்கர்ராஜ், தேஜூ, குருஜி, திருவனந்தபுரத்தை சேர்ந்த ரஞ்ஜித் பனிக்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை விதான சவுதா போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டு 3வது இடம் பெற்றார். தேர்தல் முடிவு வந்தபிறகு ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் தலைமறைவாக இருப்பதாதாக கர்நாடக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் திடீரென்று இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.சி.சி.பி போலீசார் தனிப்படை போலீசார் கேரளா சென்று ஹரி நாடாரை கைது செய்தனர். தனிப்படை போலீசார் அவரை கேரளாவில் இருந்து பெங்களூருவிற்கு நேற்று கொண்டு வந்தனர். இங்கு அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.சி.பி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். …
The post கர்நாடக தொழிலதிபரிடம் 7.20 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஹரி நாடார் கைது appeared first on Dinakaran.