கொரோனாவை விட போலீசுக்கு பயந்து அணிபவர்களே அதிகம்: சாலையோர கடைகளில் முககவசம் விற்பனை 70 சதவீதம் சரிந்தது

நெல்லை: கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில் சாலையோர கடைகளில் முகவசம் விற்பனை ஒரே மாதத்தில் 70 சதவீதம் சரிந்துள்ளது. போலீசுக்கு பயந்து அணிபவர்களே அதிகமாக உள்ளனர். கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோன வைரஸ் பரவல் வேகம் கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை 4 மாதங்களில் உச்சத்தை தொட்டது. இதனால் முககவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 முதல் அபராதம் விதித்து அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது மக்களும் அதற்கு பயந்து தவறாமல் முகவசம் அணிந்து சென்றனர். இதனால் இவற்றின் விற்பனை முழு லாக்டவுன் நாட்களில் உச்சத்தை அடைந்தன. மற்ற எல்லா தொழில்களும் படுத்த நிலையில் முககவசம், கையுரை, கை கழுவும் கிருமிநாசினி திரவங்கள், சோப்பு போன்றவைகளில் விற்பனை அமோகமாக இருந்தன.

இதை பயன்படுத்தி வேலை இல்லாத பல பட்டதாரி இளைஞர்களும் பலதரப்பினரும் சாலையோரங்களில் நின்று முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை விற்பனை செய்தனர். ஒரு கட்டத்தில் நெல்லை மாநகரில் 100 அடிக்கு ஒருவர் வீதம் நின்றுகொண்டு இவற்றை விற்பனை செய்ததை பார்க்க முடிந்தது. அனைவருக்குமே ஓரளவு வருவாயும் கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மீண்டும் பொது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் போன்ற நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டன. கோயில்களும் நியதிகளுடன் திறக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக சகஜ வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கினர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மருத்துவத்துறையினருக்கு ஏற்பட்டது. மாறாக செப்டம்பர் 2ம் வாரத்திற்கு பின்னர் கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் இருந்து இறங்கத் தொடங்கியது. இந்த நிலை நேற்று வரை நீடிக்கிறது.

இதனால் பொதுமக்கள் முககவசம் அணிவதை பொருட்டாக நினைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது முககவசம் அணிவதில்லை. அல்லது பெயரளவிற்கு கழுத்தில் தொங்க விட்டுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே முறையாக முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு வருகின்றனர். கையுறை அணிபவர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் சாலையோர முககவசம் உள்ளிட்டவைகளை விற்பவர்களின் வியாபாரம் சரிந்தது.

நெல்லை, தூத்துக்குடி மாநகரில் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலைகளில் முககவசம் கையுரை, ஹேண்ட் சானிடேசர் போன்றவைகளை விற்பனை செய்த நிலையில் தற்போது 20க்கும் குறைவானவர்களே விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து முககவச வியாபாரிகள் சங்கரசுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் கூறியதாவது: நாள்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் அளவிற்கு விற்பனையான நிலையில் தற்போது 500 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகிறது. அதில் முதல்போக பாதிக்கும் குறைவான அளவே லாபம் கிடைக்கிறது. ஒரு சில பகுதிகளில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தவர்களுக்கு தற்போது 30 சதவீத அளவிற்கே விற்பனை நடக்கிறது.

ரூ.10 முதல் ரூ.100 வரை விலைகளில் பலரக முககவசம் இருந்தாலும் தற்போது அவசரத்திற்கு ஒரு சிலர் ரூ.10 முக கவசத்தையே வாங்குகின்றனர். பெரிய ஜவுளி கடை போன்ற பல நிறுவனங்களில் தற்போதும் முககவசம் அணியாதவர்களை அனுமதிப்பதில்லை. அதுபோன்ற இடங்களுக்கு முககவசம் அணியாமல் மறந்து வருபவர்கள் அருகே நிற்கும் வியாபாரிகளிடம் முககவசம் வாங்குகின்றனர். பெரும்பாலனவர்கள் சாலைகளில் முககவசம் இன்றியே செல்லகின்றனர். சிலர் மறந்து வந்துவிட்டால் போலீசுக்கு பயந்தே ரூ.10க்கு வாங்கிச் செல்கின்றனர். முககவசம் வாங்குபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதால் பலர் சாலையோரத்தில் இந்த வியாபாரத்தை செய்வதை விட்டுசென்றுவிட்டனர் என்றனர்.

Related Stories:

>