சீன வரைபடத்தில் லடாக்கை சேர்த்த சர்ச்சை: டிவிட்டரின் விளக்கம் சரியல்ல நாடாளுமன்ற குழு அதிருப்தி

புதுடெல்லி: சீன வரைபடத்தில் லடாக்கை இணைத்து வெளியிட்ட விவகாரத்தில், டிவிட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற கூட்டு குழு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.  இந்தியாவுக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை, சீனாவுக்கு சொந்தமானது என்பது போல் வரைபடத்தில் டிவிட்டர்  வெளியிட்டது. இது தொடர்பாக, டிவிட்டர் இந்தியா நிர்வாகிகள் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கான  நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நேற்று சந்தித்து  விளக்கம் அளித்தனர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லெகி, டிவிட்டர் இந்தியா  நிர்வாகிகள் தவறுக்காக மன்னிப்பு கேட்டனர்.

தற்போது பிரச்னை அதுவல்ல. பிரச்னையே இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை பற்றியது. கூட்டு குழு உறுப்பினர்களுக்கு அவர்கள் அளித்த  விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, டிவிட்டர் தலைமையகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது,’’ என்றார்.

வெளிப்படையாக இருக்கிறோம்

டிவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வரைபட விவகாரத்தில் டிவிட்டர் இந்தியா நிறுவனம் விரைந்து செயல்பட்டது. எந்த  விஷயத்திலும் வெளிப்படை தன்மை, திறந்த தன்மையுடன் செயல்பட இருக்கிறோம். அவ்வபோது மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்து  உடனுக்குடன் அரசுக்கு தெரியபடுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: