வழக்கு நடக்கும் போதே சிறையில் இருந்து விட்டேன் 3 மாதங்களுக்கு முன்பாகவே விடுதலை செய்ய வேண்டும்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மனு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன், தன்னை 90 நாட்கள் முன்கூட்டியே விடுதலை செய்யகோரி  ெபங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நான்கு பேரை குற்றவாளிகள் என ெபங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த  தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், நான்கு  பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நான்கு பேரையும் குற்றவாளியாக தீர்மானித்து பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி  செய்தது. அதை தொடர்ந்து ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை தவிர மற்ற மூன்று பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி ஆனது.   அவர்கள், கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம்  வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் மாதம் முடிகிறது. இதனிடையே சிறையில் உள்ள மூன்று பேரும் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே  விடுதலையாவார்கள் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சிறையில் உள்ள சுதாகரன் தரப்பில் அவரது வக்கீல்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை சிறப்பு மனு ஒன்று தாக்கல்  செய்துள்ளனர். இதில் ‘இதே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தபோது சுதாகரன் 90 நாட்கள்  சிறையில் இருந்துள்ளார். ஆகவே, அவரை 90 நாட்கள் முன் கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் வாய்ப்பு உள்ளதால், அவரை 90 நாட்கள் முன்  விடுதலை செய்ய வேண்டும். மேலும், தண்டனை காலத்தில் அவர் பரோலில் விடுதலையாகாமல் தண்டனை அனுபவித்து உள்ளதையும் கருத்தில்  கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளனர். சுதாகரன் சார்பில் தாக்கல் செய்துள்ள சிறப்பு மனு நீதிபதி சிவராம் முன்னிலையில் இந்த வார இறுதிக்குள்  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: