அரியானாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை: கடத்த முயன்ற வாலிபர் வெறிச்செயல்; பயங்கரமான சிசிடிவி காட்சிகள் வைரல்

பரிதாபாத்: அரியானாவில் தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவி  நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கடத்த முயன்ற வாலிபர் இந்த வெறிச்செயலை செய்துள்ளான். அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கர் பகுதியை சேர்ந்தவர் நிகிதா தோமர் (21). அங்குள்ள கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு  அவர் சென்றார். மாலை 3.40 மணி அளவில் கல்லூரியில் இருந்து தனது தோழியுடன் பேசியபடி வெளியில் நடந்து வந்தார். கல்லூரி வாசல் அருகே தவ்ஷீப் என்ற வாலிபர் தனது நண்பருடன் காரில் காத்திருந்தார். நிகிதா வந்ததும், அவரை காரில் தள்ளி கடத்த முயன்றார். ஆனால், நிகிதா அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆத்திரமடைந்த தவ்ஷீப் தனது கைத்துப்பாக்கி எடுத்து மிரட்டினார்.

பதறிப் போன நிகிதா, தோழியின் பின்னால் ஒளிந்தபடி நிகிதா தப்பிக்க முயல, யாரும் எதிர்பார்க்காத நிலையில், தவ்ஷீப் தனது துப்பாக்கியால் நிகிதாவின் தலையை நோக்கி சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நிகிதா சரிந்து விழுந்தார். உடனே தவ்ஷீப்பும் அவரது நண்பர் ரெஹனும் காரில் ஏறி தப்பினர். நடுரோட்டில் மாணவி சுடப்பட்டதைப் பார்த்து பதறிப் போன அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பட்டப்பகலில் கல்லூரி அருகே வெறிச்செயல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்களும், கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர்,  தீவிர தேடுதல் வேட்டையை தொடர்ந்து தவ்ஷீப், ரெஹன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அநியாயமா கொன்னுட்டாங்க

நிகிதாவின் தந்தை அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2018ல் தவ்ஷீப் மீது புகார் கொடுத்தோம். ஆனால் வழக்கு, விசாரணை என்று போனால் மகளின் பேர் கெட்டுடுமேன்னு வாபஸ் பெற்று ஒதுங்கினோம். ஆனால், இப்ப அநியாயமா என் பொண்ணை கொன்னுட்டாங்களே’’ என கண்ணீர் மல்க கதறினார். நிகிதாவின் தாய் கூறுகையில், ‘‘என் மகளை கொன்ற மாதிரியே குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்’’ என்றார்.

2018ல் கடத்தியவர்கள்

கொலையாளி தவ்ஷீப் ஏற்கனவே  மாணவி நிகிதாவை கடந்த 2018ல் கடத்தி உள்ளார். அப்போதே நிகிதாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் அப்புகாரை பெற்றோர் வாபஸ் வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் நடவடிக்கை பாயும்

அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பல்லாப்கர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது’’ என்றார்.

Related Stories: