காலநிலைக்கு ஏற்ப குறுகிய கால நெல் ரகம்: வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் குமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மனு

நாகர்கோவில்: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் என்.குமார் திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வு பணிக்கு வந்தார். அப்போது மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் செண்பகசேரபிள்ளை தலைமையில் விவசாயிகள் வறுக்கதட்டு தங்கப்பன், தேவதாஸ், மூர்த்தி, வேல்முருகன் ஆகியோர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் குறிச்சி, முல்லை, மருதல், நெய்தல் ஆகிய நால்வகை தினைகளோடு எல்லா வளமும் கொண்ட மாவட்டத்தில் தோட்டகலை கல்லூரி அமைக்க வேண்டும். முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டது திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையம்.

இந்த ஆராய்ச்சி நிலையம் வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது. அதோடு நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை தலைவராக நியமிக்காமல் பிறதுறை வல்லுநர்களை நியமிப்பதன் மூலம், ஆராய்ச்சி நிலைய செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்து முன்புபோல் தனித்தலைமையுடன் சுதந்திரமாக இயக்க ஆவண செய்யவேண்டும். திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நவீன கட்டமைப்புகளோடு கிட்டங்கி வசதி, தானியம் பிரித்து எடுப்பதற்கான தளம் மற்றும் நவீன தானியங்கி விதை சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவவேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள 3 ஆராய்ச்சி நிலையங்கள், ஒரு வேளாண் அறிவியல் நிலையங்களில் பூச்சியல் வல்லுநரை நியமனம் செய்யவேண்டும். பஞ்சகாலங்களில் பசிபிணியை போக்கிய மரவள்ளிகிழங்கு சாகுபடி குமரி மாவட்டத்தில் நோய்தாக்குதலால் சாகுபடி இல்லாமல் ஆகிவிட்டது. மரவள்ளிபயிரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மாவட்டத்தில் வெள்ளை சுருள் ஈ, கேரளா வாடல்நோய் மற்றும் மஞ்சள் நோயால் பாதிகக்ப்பட்டு வளர்ச்சி குன்றி உற்பத்தி திறன் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்திட்ட நிலையில் தென்னை விவசாயமே முற்றிலும் அழிந்து போககூடிய அபாய நிலையிலுள்ளது. உரிய களஆய்வுகள் மேற்கொண்டு செயல்விளக்க திடல்கள் அமைத்து தென்னையை காப்பாற்றவேண்டும்.

இதேபோல் மாவட்டத்தில் அம்பை 16, சிஆர்-1009 நெல் ரகங்கள் அறிமுகப்படுத்துப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த ரகங்கள் தனது முழுஉற்பத்தி திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை முற்றிலும் இழந்துவிட்டது. எனவே மாவட்டத்தின் காலநிலைக்கு ஏற்ப புதிய குறுகிய மற்றும் மத்தியகால உயர்விளச்சல் நெல் ரகங்களை உருவாக்கி உதவவேண்டும். மழைகால அறுவடையின்போது எந்திரம் மூலம் அறுவடை செய்கின்ற வேளையில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தானிய இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். அதனை தவிர்க்க வருகிற காலங்களில் அறுவடை இயந்திரத்தில் உரிய மாற்றங்களை செய்யவேண்டுகிறோம். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: