வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில் குடிமகன்களுக்கு இலவச பாராக மாறிய பஸ் நிழற்குடை: பொதுமக்கள் கடும் அவதி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் வேலை, வியாபாரம் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஏகனாம்பேட்டை வந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள், ஏகனாம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து, பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். இதில், காஞ்சிபுரம் செல்லும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் நிற்க இடமின்றி தவித்தனர்.  

இதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், குடிமகன்களுக்கு இலவச பாராகவும், கட்டணம் இல்லாத கழிப்பறையாகவும் மாறிவிட்டது. இதனை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏகனாம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏகனாம்பேட்டை பஸ் நிழற்குடை, தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. இங்கு வரும் குடிமகன்கள், போதை தலைக்கு ஏறியதும், அருகில் உள்ள வியாபாரிகளிடம் வீண் சண்டை இழுப்பது, தொடர் கதையாகவே உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இந்த பஸ் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும். போலீசாரும் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

Related Stories: