தலைசிறந்த டென்னிஸ் வீரர் யார்? முட்டி மோதும் மும்மூர்த்திகள்!: அனல் பறக்கும் கிராண்ட் ஸ்லாம் ரேஸ்

டென்னிஸ் வரலாற்றில் உலகின் தலைசிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் நிபுணர்களே நிலைகுலைந்து போயுள்ளனர் என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவாக் ஜோகோவிச் என்ற மூன்று வீரர்களுக்கு இடையேயான போட்டி இன்று வரை உயிர்ப்போடும் துடிப்போடும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிபுணர்களே திணறுகிறார்கள் என்றால், ரசிகர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். தங்கள் அபிமான வீரர்தான் டாப் என்று சமூக வலைத்தளங்களில் சதிராட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ரபேல் நடால், பெடரரின் சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களுக்குப் பின்னால் விடாப்பிடியாக ஓடி வரும் ஜோகோவிச் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.இவர்களில் ஓய்வு பெறுவதற்கு முன்பாக  யார் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதிக்கப் போகிறார் என்பதே டென்னிஸ் உலகின் மில்லியன்… சாரி… பில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

இந்த மும்மூர்த்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலான மைதானங்களில், ஒரு குறிப்பிட்ட கிராண்ட் ஸ்லாம் தொடரில் அதிக ஆதிக்கம் செலுத்துவது ‘சம்திங் ஸ்பெஷல்’ ரகம் என்று தான் சொல்ல வேண்டும். களிமண் தரை மைதானத்தில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடால் 13 முறை சாம்பியன் பட்டம் வென்று ‘கிங் ஆப் கிளே’  என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். இனியும் அவரை களிமண் தரை மைதானங்களின் ராஜா என்று அழைப்பதை விட… ‘எம்பரர் ஆப் கிளே’ என ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாக போற்றுவதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு தான் ஒரு கிளே கோர்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற முத்திரையை ஓங்கிக் குத்தியிருக்கிறார்.அதே சமயம், புல் தரை மைதானங்களில் நடைபெறும் விம்பிள்டன் தொடரில் ரோஜர் பெடரரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அங்கு அவர் 8 முறை கோப்பையை முத்தமிட்டிருக்கிறார்.

கடினதரை மைதானத்தில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபனை ஜோகோவிச் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஸி. ஓபனில் மட்டும் அவர் 8 முறை சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மூன்று மகத்தான வீரர்களுக்கு இடையேயான கிராண்ட் ஸ்லாம் ரேஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்க முடியாவிட்டாலும், முதலிடம் பிடிக்கப் போவது யார் என்ற ஆன்லைன் கருத்துக் கணிப்பில் நடாலுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச்சுக்கும், பெடரருக்கு 3வது இடத்தையும் அளித்துள்ளனர்.

முன்னாள் நட்சத்திரங்கள் ஜான் போர்க், பீட் சாம்பிராஸ், ஜான் மெக்கன்ரோ, ஜிம்மி கானார்ஸ், போரிஸ் பெக்கர் போன்றவர்களும் தலைசிறந்த வீரர்களுக்கான போட்டியில் இருந்தாலும், அனைத்து தலைமுறைக்குமான ‘GOAT’ யார் என்பதில் மும்மூர்த்திகளே முன்னிலை வகிக்கின்றனர்.  பெடரருக்கு தற்போது 39 வயதாகிறது. அதிகபட்சமாக இன்னும் ஒரு சீசன் தாக்குப்பிடிக்கலாம் என்பதால், 2021ல் அவர் குறைந்தபட்சம் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமாவது வென்று சாதனை படைக்க கடுமையாக முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதன் பிறகும் சில ஆண்டுகளுக்கு நடால், ஜோகோவிச் இருவரும் இந்த ரேசில் நிச்சயம் ஓடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் களத்தில் இருக்கும் வரை டென்னிஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதன் பிறகே, கிராண்ட் ஸ்லாம் அரங்கில்சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்கள் டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஸ்வெரவ், சிட்சிபாஸ் போன்றவர்களுக்கான சகாப்தம் தொடங்கும்.

Related Stories: