தா.பேட்டை சிவன் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு

தா.பேட்டை: தா.பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் பிரகாரத்தில் வழிபாட்டில் இருந்த ஐயப்பன் சிலை தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு இல்லாமல் சாக்கில் மூட்டையாக கட்டி ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தது. ஐயப்பன் சிலையை வழிபாட்டுக்கு வைக்க வேண்டுமென அறநிலையத்துறை அலுவலர்களுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐயப்பன் சிலை விவகாரம் குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தா.பேட்டை சிவன் கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் போலீசாருடன் வந்தார்.

அப்போது ஐயப்பன் சிலை விவகாரம் குறித்து வரப்பெற்ற புகாரின்பேரில் செயல் அலுவலர் அண்ணாமலை, அர்ச்சகர் மணிகண்டன், கோயில் காவலர் புருஷோத்தமன் ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் கோயில் வளாகத்துக்குள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 63 நாயன்மார்கள், சமயகுரவர்கள் மற்றும் பிற சிலைகளின் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் கோயில் வளாகத்தில் இருந்த ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பழைய சிலைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரி ராஜாராம், சிலை குறித்த விபரங்களை ஆவணப்படுத்தி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறநிலையத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினர்.

Related Stories: