திருக்கழுக்குன்றம் அருகே மினி வேன் கவிழ்ந்து பெண் பலி; 5 பேர் படுகாயம்: போதை டிரைவருக்கு போலீஸ் வலை

திருக்கழுக்குன்றம்: சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு, திருக்கழுக்குன்றம் அருகே தண்டரை உள்பட பல்வேறு கிராமங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நாள்தோறும் ஒரு மினி வேனில் வேலைக்கு சென்று வருகின்றனர்.  இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் மினி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வேனை ஆமூர் கிராமத்தை சேர்ந்த அகஸ்டின் (34) ஓட்டி வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வேன் தாறுமாறாக ஓடுவதைக் கண்டு பெண்கள் அலறி சத்தம் போட்டபடி வந்தனர்.இதற்கிடையே இந்த வேன் நள்ளிரவு 12.30 மணியளவில் அமிர்தபள்ளம் என்ற இடத்துக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பெண்கள் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து மீட்டனர்.

இவ்விபத்தில் தண்டலம் கிராமத்தை சேர்ந்த அனுசுயா (19) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த மோகனலட்சுமி, கல்பனா உள்பட 5-க்கும் மேற்பட்டோரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் பலியான அனுசுயா சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: