கட்டி முடித்து 10 மாசமாச்சு... பொது கழிப்பறை திறப்பு எப்போது?கொல்லப்பட்டி மக்கள் கேள்வி

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லப்பட்டியில் கட்டி முடித்து 10 மாதங்களாகியும் பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லப்பட்டியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானம் செல்லும் சாலையில் பாளையம் பேரூராட்சி சார்பில் 2019-20ம் ஆண்டிற்கான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் நவீன பொது சுகாதார வளாகம் சின்டெக்ஸ் டேங், பைப் லைனுடன் கட்டப்பட்து. ஆனால் இதுவரை கழிப்பறைக்கு தேவையான தண்ணீர், மின்சார வசதி செய்து தரவில்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இதனால் இப்பகுதி திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக பெண்கள் இரவுநேரங்களில் கழிப்பிடம் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர், மின்சார வசதி செய்து கொண்டு கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: