சின்னசேலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 100 அறுவடை இயந்திரங்கள் கர்நாடகா அனுப்பி வைப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 100 அறுவடை இயந்திரங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல் அறுவடை காலங்களில் வருடத்திற்கு இரண்டு முறை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் ஆந்திராவின் விஜயவாடா, தெலுங்கானாவின் ஹைதராபாத், கர்நாடகாவின் பெல்லாரி, சூரக்கல் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்களை ஓட்டிச் செல்ல டிரைவர்களுக்கு கஷ்டம் உள்ளது.

மேலும் டோல்கேட் பிரச்னை போன்ற பல்வேறு இடர்பாடுகளும் உள்ளது. இதை தவிர்க்க நெல் அறுவடை இயந்திரங்கள் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு நேற்று 32 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வந்தது. இதில், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் வைக்கோல் கட்டு சுற்றும் இயந்திரங்களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்து ஏற்றினார்கள்.

இதையடுத்து கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டம் சூரக்கல் பகுதிக்கு 100 வாகனங்கள் சரக்கு ரயில் மூலம் புறப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்திற்கு 48 அறுவடை இயந்திரங்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: