அரசியல் வேறு; நட்பு வேறு நிதிஷ் காலில் விழுந்து ஆசி பெற்ற சிராக்: பீகார் அரசியலில் சுவாரசியம்

பாட்னா: தேர்தல் களத்தில் எதிரிகளாக உள்ள நிலையில், நிதிஷ் குமாரின் காலை தொட்டு சிராக் பஸ்வான் ஆசி பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும்,   ராஷ்டிரிய ஜனதா தளம, காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மோதலால், தேசிய  ஜனநாயக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி இக்கட்சியின் தலைவரும்,  மத்திய அமைச்சருமான் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், கட்சிக்கு பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான்  தலைமையேற்றுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, தனது தந்தையின் மறைவுக்கு  நிதிஷ் இரங்கல் தெரிவிக்கவில்லை என சிராக் பஸ்வான் விமர்சித்து இருந்தார். மேலும்,  பாட்னா விமான நிலையத்தில் தனது தந்தையின் உடலை வாங்குவதற்காக வந்தபோது நிதிஷ் குமார் காலை தொட்டு வணங்கியதாகவும், அதனை  அவர் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்விலாஸ் பஸ்வானின் நினைவிடத்துக்கு நிதிஷ்  வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, மரியாதை நிமித்தமாக அவருடைய காலை தொட்டு சிராக் வணங்கினார். அவரை நிதிஷ்ஆசிர்வதித்து  சென்றார். சிறிது நேரத்தில், தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை சிராக் வெளியிட்டார்.

அதில்,  ஐக்கிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவரின் மகளின் பெயர் இடம் பெற்று இருந்தது. நிதிஷ் குமார் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் மகள்  கோமல் சிங். இவருக்கு லோக் ஜனசக்தி கட்சி சார்பில் தேர்தலில் போட்டிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சூடா தண்ணி குடிங்க... நம்பர்-1 எதிரிக்கு டிப்ஸ்

பீகாரில் எதிர்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளார். பாட்னாவில் நடந்த ராம் விலாஸ் பஸ்வான் நினைவு நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவை சந்தித்தார். அப்போது  இருவரும் ஒரு சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போது தேஜஸ்வி யாதவ், தொடர் தேர்தல் பிரசாரம் காரணமாக தனது தொண்டை  கட்டியிருப்பதாக கூறினார். இதற்கு நிதிஷ்குமார், “வெதுவெதுப்பான நீர் குடியுங்கள். நானும் அதைதான் குடிக்கிறேன்” என்று அறிவுரை கூறினார்.

Related Stories: