மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு: நாட்டின் முதல் மாநிலமாக அதிரடி நடவடிக்கை

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் 4 மசோதாக்கள் ஒரு மனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளன.  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப்  மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நீர்த்து போக செய்யும்படியாக,  மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டங்களை நிறைவேற்றும்படி காங்கிரஸ் முதல்வர்களுக்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா  காந்தி ஆலோசனை வழங்கினார். அதன்படி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் சட்டங்களை தடுத்து  நிறுத்தும் வகையிலான மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்தது. கூட்டத் தொடரின் முதல் நாளான  நேற்று முன்தினம் அமளி காரணமாக மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் 2ம் நாளான நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ், யாரும் நெல் அல்லது கோதுமை, கொள்முதல் அல்லது  விற்பனை செய்ய முடியாது. இதனை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வழி  வகுக்கப்பட்டுள்ளது. அதே போல், வேளாண் விளைபொருட்களை பதுக்குதல், கள்ளசந்தை விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த  மசோதாக்கள் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து சட்டம்  நிறைவேற்றிய நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் அரசு பெற்றுள்ளது.

Related Stories: