சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னை:  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை இடைக்கால நிவாரணமாக எதுவும் வழங்க மறுத்து உத்தரவிட்டது. குறிப்பாக இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் தமிழக அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,” கடந்த 9ம் தேதி தமிழக அரசு தரப்பில் உருவாக்கப்பட்ட  மற்றும் இதுதொடர்பான உயர்மட்ட குழுக்கள் அனைத்தும் ஆலையை ஆய்வு செய்ததில் எந்த பிரச்னையும் இல்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அதனால் ஆலை பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள மனுவிற்கு உச்ச நீதிமன்றமும் எந்தவித இடைக்கால நிவாரணத்தையும் வழங்கக்கூடாது. மேலும் அதுதொடர்பான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அனைத்து மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: