குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: இயந்திர நடவுமுறைக்கு தயாராகும் விவசாயிகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நெல் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கும்பப்பூ சாகுபடிக்கான நாற்றங்கால் தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு நாற்றுகள் தயாரிக்க புதிய முறைகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். தற்போது பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக நெல் வயல்களில் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த செலவு, அதிக மகசூல் என்ற நிலை விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

நாற்று நடவு பணிகளின்போதும் குறைந்த அளவு நாற்றை கொண்டு அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்ய முடியும் என்ற அடிப்படையில் இயந்திரங்கள் உதவியுடன் நாற்று நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியில் உள்ள விவசாயிகள் இயந்திர நடவு பணிகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக பாய் நாற்றங்கால், நாற்று தட்டுக்களில் இயந்திர நடவு முறைக்கு நாற்றுகள் தயார் செய்யப்பட வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 100 சதுர மீட்டர் அளவு நாற்றங்காலில் ஏக்கருக்கு 15 கிலோ சான்று பெற்ற விதைகளை விதைத்து 12 முதல் 15 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகி விடுகிறது. நடவு செய்வதற்கு முன்னதாக வயலை நன்கு சேற்றுழவு செய்து சமப்படுத்தி சேற்றை ஒன்றிரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டுவிட்டு கீழ மட்ட மண் போதுமான அளவு கடினமானதும் நடவு இயந்திரம் வயலில் இறக்கப்பட்டு நடவு செய்யப்படுகிறது.

இவ்வாறு இயந்திர நடவுமுறைக்கு பாய் நாற்றங்கால் தயார் செய்ய விவசாயிகள் நூதன முறைகளை கையாளுகின்றனர். பிளாஸ்டிக் காகிதங்களை போட்டு அதன் மீது மண் தூவி நெல் விதைகளை தூவிவிடுகின்றனர். முளைத்து வருகின்ற இந்த நாற்றுகள் மீது தண்ணீர் தெளிக்க ஏதுவாக நாற்றங்கால் முழுவதும் சேலைகளை விரித்து மூடி விடுகின்றனர். வண்ண வண்ண சேலைகளை மூடிவிடுவதால் பறவைகள், பூச்சிகள், வேறு விலங்குகள் விரைந்து வந்து இந்த வகை நாற்றங்காலை தாக்காது என்பதுடன் தண்ணீர் தெளிப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் நாற்றங்கால் வெயிலில் காய்ந்து நாற்றுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

அடுத்த 15 நாட்களில் நடவு செய்வதற்கு தயாராகி விடும் என்று அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். பாய் நாற்றங்காலில் தயார் செய்யும் நாற்றுகள் 22.5க்கு 22.5 செ.மீ இடைவெளி இருக்கும்படி நடவு செய்தல் அவசியம். இதில் கை நடவை விட குறைந்த நேரம் மற்றும் குறைந்த பணியாட்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாற்றுகள் விரைவாக வளர்ந்து வேகமாக தூர் பிடித்து சீராக முதிர்ச்சியடையவும் செய்கிறது. இதற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்ட நெல் இயக்கத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.1200 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: