அமெரிக்காவில் டிரம்ப் பிரசாரத்தில் கமலா பெயர் தவறாக உச்சரிப்பு; மக்கள் கொந்தளிப்பு: க-ம-லா, காஹ்-மாஹ்-ல, கமலா மாலா மலா - எது சரி?

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப்பின் பிரசாரத்தில் செனட் எம்பி ஒருவர் கமலா ஹாரிசின் பெயரை தவறாக உச்சரித்ததால், டிவிட்டரில் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடென் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் பிரசாரம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்ஜியாவின் மேகான் நகரில் நேற்று முன்தினம் நடந்த அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் பேசிய குடியரசு கட்சி செனட் எம்பி.யான டேவிட் பெர்டியு, ‘‘அதென்ன க-ம-லா? காஹ்-மாஹ்-ல? கமலா மாலா  மலா? அடப் போங்கய்யா எப்படின்னு தெரியல? ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும்...’’ என ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கிண்டலடித்து பேசினார். இது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள், குறிப்பாக இந்திய வம்சாவளிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஜானி என்பவர் ‘மை நேம் இஸ்’ என டிவிட்டரில் ஹேஷ்டேக் தொடங்கி, ‘இது சகிப்பின்மையை எதிர்த்து விரட்டி அடிக்கும் பிரசாரம்’ என திரியை கொளுத்தி போட்டார்.

அதைத் தொடர்ந்து ‘ஐஸ்டேன்ட்வித்கமலா’ என்றொரு ஹேஷ்டேக்கும் பிரபலமானது. இவற்றில் பலரும் தங்கள் பெயரையும், அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு, செனடர் பெர்டியுவுக்கு பதிலடி தந்தனர். இந்த ஆன்லைன் பிரசாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டை விட்டே போயிடுவேன்: டிரம்ப் காமெடி

ஜார்ஜியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘அதிபர் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வி அடைந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பார்த்தீர்களா? நான் அதை நல்லதாக நினைக்க மாட்டேன். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மோசமான அதிபர் வேட்பாளரிடம் நாடு பறி போனதற்காக வருத்தப்படுவேன். அவரிடம் நான் தோற்று விட்டால், நாட்டை விட்டே கூட நான் வெளியேறக் கூடும். ஆனால், அது பற்றி இப்போது எதுவும் எனக்குத் தெரியாது,’’ என்றார். டிரம்ப்பின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது.

‘இதுபோன்ற காமெடிகளை டிரம்ப் அடிக்கடி செய்வது வழக்கம்தான்’ என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ‘டிரம்ப் எந்த நாட்டில் குடியேறுவார்?’ என்று விவாதித்து வருகின்றனர். ‘டிரம்ப்பின் முடிவை வரவேற்கிறேன்’ என்று அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடென் கூறியுள்ளார்.

Related Stories: