கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம் வேண்டாம் நவம்பர் முதல் 2வது தாக்குதல்: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: ‘ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில்தான் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டது. அதேபோல், இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2ம் அலை தாக்குதல் இருக்கும்,’ என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால். இவர், இந்தியாவில் கொரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டு நிபுணர்கள் குழு, தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று கூறியதாவது: கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

ஆனால், இதை வைத்து கொரோனா தொற்று காலம் முடிந்து விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் 90 சதவிகித மக்களுக்கு எளிதில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படக் கூடிய சிக்கலும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில்தான் கொரோனா பரவலின் வேகம் உச்சத்தைத் தொட்டது. இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி என அடுத்த மூன்று மாதங்கள் குளிர்காலமாக இருப்பதால், கொரோனாவின் 2ம் அலை தாக்கும் அபாயம் இருக்கிறது.

எனவே, மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரசின் வீரியம், செயல்படும் தன்மை பற்றி இன்னும் இறுதி முடிவுக்கு வர முடியாமல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனவே, எச்சரிக்கையுடன் இந்த குளிர்காலத்தைக் கடக்க வேண்டிய சவால் நமக்கு இருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலான திட்டம் மத்திய அரசிடம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘ஓணத்துக்கான விலையை கேரள அரசு கொடுக்கிறது’

‘சண்டே சம்வாத்’ என்ற சமூக வலைதள நிகழ்ச்சியின் மூலமாக மக்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று கலந்துரையாடினார். அதில் அவர், ‘‘கட்டுப்பாடற்ற ஊரடங்கு தளர்வு, ஓணம் பண்டிகை போன்றவற்றால் கேரளாவில் கொரோனா தொற்று பல மடங்காக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கு கேரள அரசின் அலட்சியமே காரணம். ஓணம் கொண்டாட்டத்துக்கான விலையை இப்போது அது கொடுத்து வருகிறது. இதில் இருந்து மற்ற மாநிலங்கள் பாடம் கற்க வேண்டும்,’’ என்றார்.

சீனா கருத்துக்கு ஆதாரமில்லை

‘சண்டே சம்சாத்’ நிகழ்ச்சியில் ஹர்ஷ் வர்தன் மேலும் கூறுகையில், ‘‘தனது நாட்டில் கொரோனா பரவும் முன்பாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் அது பரவி இருந்தது என்று சீனா கூறியிருப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அந்நாட்டின் வுகான் நகரில் கொரோனா பரவியபோது, உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த வைரஸ் இருப்பதாக கூறப்படவில்லை,’’ என்றார்.

குளிரூட்டிய பாக்கெட் உணவில் கொரோனா

சீனாவின் பிரபல குயிங்டோ துறைமுகத்தில் இறக்குமதியான குளிரூட்டப்பட்ட உணவுப் பொட்டலங்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாக்கெட் மீன் இறைச்சியில் இதை கண்டறிந்துள்ளனர். இந்த உணவுப்பொருட்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதன்மூலம், ‘பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், இறைச்சிகளை வாங்குவதில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது’ என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: