விலையை கேட்டாலே கண்ணீர் வருது... வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: உள்ளி கிலோ 110 ரூபாய்

நெல்லை: வீடுகளில் அன்றாட சமையல் பொருட்களில் உள்ளி என்றழைக்கப்படும் சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பல்லாரி கிலோ ரூ.18 முதல் 20 வரையும், உள்ளி ரூ.30 வரையும் விற்பனையான நிலையில், தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் இவற்றின் விலைகள் கிடுகிடுவென உயரத் துவங்கியுள்ளன. வழக்கமாக மழைக்காலம் துவங்கி ஜனவரி வரை பல்லாரி, உள்ளி ஆகியவற்றின் விலை உச்சத்தை தொடும். கடந்தாண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெங்காயம் விலை கிலோ ரூ.150யை தாண்டியது. ஆனால் இந்தாண்டு மழைக்கு முன்னதாகவே இதன் விலை, ராக்கெட் வேகம் எடுத்துள்ளது.

நெல்லையில் உள்ள சந்தைகளில், நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் 110 வரை விற்பனையானது. 2வது ரகம் கிலோ ரூ.90 ஆக இருந்தது. இதேபோல் பல்லாரி வெங்காயம்  முதல் ரகம் கிலோ ரூ.70ஐ நெருங்கி உள்ளது. அதேவேளை பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர்சந்தையில் நேற்று சின்ன வெங்காயம் (முதல் ரகம்) கிலோ ரூ.84க்கும், 2வது ரகம் கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரி வெங்காயம், ரகங்களுக்கு ஏற்ப ரூ.62, 60, 55 என 3 விலைகளில் விற்பனையானது. இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பல்லாரி விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை ஏறுமுகமாக உள்ளது. மழை பெய்யத் தொடங்கினால் மேலும் விலை உயரவே வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Related Stories: