நெல் கொள்முதல் மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளலாம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: நெல் கொள்முதல் மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் சூரிய பிரகாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்தியாவில் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை. விவசாயிகளுக்கும், விளைபொருளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அரசுத் தரப்பில் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், விரிவான அறிக்கை தயார் செய்ய போதிய கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது.

மனுதாரர், ‘‘நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபிறகு மயிலாடுதுறை ெநல்ெகாள்முதல் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்’’ என்றார்.இதையடுத்து நீதிபதிகள், ‘‘லஞ்ச ஒழிப்புத்துறையினர் இயன்றவரை அனைத்து நெல் கொள்முதல் மையங்களிலும் அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்ளலாம்’’ எனக்கூறி விசாரணையை 28க்கு தள்ளி வைத்தனர்.

கொள்முதல் நிலையத்தில் 90ஆயிரம் பறிமுதல்

ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரப்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.  திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் 700 கொள்முதல் நிலையங்களில் சோதனை நடத்தினால், பல லட்சம் லஞ்ச பணம் சிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: