மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.250 கோடியா? திருப்பூர் மாநகராட்சி விளக்கம்

திருப்பூர்: திருப்பூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.250 கோடியா? என சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ.250 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சியின் 2050 ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆகும். இந்த மக்கள் தொகைக்கு தேவையான குடிநீர் தேவையை ஈடு செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் 2015-16-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றிலிருந்து குழாய் பதித்து, அன்னூர் அருகே, சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய் மூலம், திருப்பூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தில் மாநகராட்சி பகுதியில், 27 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, பகுதி வாரியாக குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொட்டியில், 4ம் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பு தொகைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: