பணி நியமனத்தில் சித்தா புறக்கணிப்பு மருத்துவ ஆணையம், மத்திய அரசு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ நியமனங்களில் சித்த மருத்துவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், தேசிய மருத்துவ ஆணையம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், யுபிஎஸ்சி உட்பட 11 எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நம் நாட்டு மருத்துவர்களுக்கு போதிய கட்டமைப்பையும், உரிய பண உதவியும் செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், சித்த மருத்துவர் ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், ‘சித்த மருத்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசு பணியிடங்களில் சித்த மருத்துவம் படித்தவர்களுக்கு பணியிடம் வழங்கும்போது முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சித்த மருத்துவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்,’ என கோரியுள்ளார். நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று இந்த மனு, வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணைக்கு வந்தது. அதில், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேசிய மருத்துவ ஆணையம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) உட்பட, மொத்தம் 11 எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்டி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: