குறுங்காடுகளாக காணப்படும் கோயில் வனங்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை: புவியின் சூழல் பாதுகாப்பில் சப்தமில்லாமல் பெரும் பங்கைத் தந்து கொண்டிருக்கும் “கோயில் வனங்களை காப்பாற்ற மாநில அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முனியப்பன், அய்யனார், சுடலைமாடன் என எல்லை தெய்வங்கள், கிராமக் காவல் தெய்வங்கள் காளி, பிடாரி என ஏராளம் இருந்தாலும், இயற்கையின் அமைப்பில் அவையனைத்தும் ஒரே மாதிரியான கோயில் காடுகளாக அமைந்திருப்பதைப் பார்க்க முடியும்.பொதுவாக ஒரு பெரிய ஆலமரம் அல்லது அரச மரம், அதனுடன் பல பனை மரங்கள், சில ஈச்சமரங்கள், அந்த மண்ணுக்கேற்றவாறு பிரத்யேக மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டுகள், புதர்களுடன் அரிய மூலிகைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாக அந்தக் காடுகள் இருக்கும். பாம்பு, கீரி, அட்டை, உடும்பு, ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட பல நூறு உயிரினங்கள் வாழும் இடமாக அது இருக்கும்.

மத்தியில் சில இடங்களில் உயரமான சிலைகளும், பல இடங்களில் வெறுமனே நட்டு வைக்கப்பட்ட வேல் கம்புகளும் தான் “கோயில் காடு’களின் பிரதானம். அரை ஏக்கர் முதல் 20, 30 ஏக்கர் வரையிலான குறுங்காடுகளாக அவை காணப்படுகின்றன.இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது :புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள “கோயில் வனங்களில் இந்த மண்ணுக்கே உரிய அரிதான பாலை மரங்கள், உசிலை, காஞ்சிரான், நெய்கோட்டான் மரங்களும், சங்கு இலை, நொச்சி இலை, ஆடு தின்னா பாலை, பெருமருந்து போன்ற அரிய மூலிகைகளும் காணப்படுகின்றன.பெரும்பாலானவை வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் கோயில் வனங்கள் பெயரிலேயே உள்ளன. சில இடங்களில் பசு மேயும் பொட்டல், மேய்ச்சல் நிலம் போன்ற வகைப்பாட்டிலும் உள்ளன. ஊருக்கேற்றாற்போல கொம்படி ஆலயம், காட்டுக்கோயில் போன்ற பெயர்களும் பிரத்யேகமாக உள்ளன.

பல நூறு ஆண்டுகள் பழமை மாறாமல் இருந்த இக்காடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஆபத்து நேரத் தொடங்கியிருக்கிறது. மண்ணால் ஆன பெருஞ்சிலைகளைச் செய்து வழிபட்டு வந்த நம் மக்கள் இப்போது அழியாத சிலைகளை அமைக்கிறோம் என்ற பெயரில் கோயில் வனங்களின் உயிர்த்தன்மையை அழிக்கிறார்கள்.மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது தான் பிரதானம் என்றாலும் அரசு இதற்கான சில வழிமுறைகளைக் கண்டறிந்து முறைப்படுத்தி அந்த கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.கிராமங்களில் புனிதமான இடமாகக் கருதப்படும் இக்காடுகளுக்கு இப்போது பல்வேறு வடிவங்களில் ஆபத்து வந்திருக்கிறது. ஒன்று அருகிலுள்ள நிலத்துக்காரர்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலத்தின் பரப்பை காடுகளுக்கும் நகர்த்தி நகர்த்தி வந்திருக்கிறார்கள்.

அரசுப் புறம்போக்கு என்பதால் சில இடங்களில் சமுதாயக் கூடங்கள் போன்ற பொதுக் கட்டடங்களும் கட்டப்படுகின்றன. சில இடங்களில் கோயிலை பிரம்மாண்டமாக எழுப்புகிறோம் என்ற பெயரில் மரங்களை அழித்து அந்தக் குறுங்காட்டின் தனித்தன்மைகளை மாற்றி கான்கிரீட் கட்டடங்களை எழுப்புகிறார்கள். மேலும், ஊடுருவும் தாவரங்களான சீமைக்கருவேலம், பார்த்தீனியம், உண்ணி போன்ற தாவரங்களும் இக்காடுகளுக்குள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஆபத்தானவை.

ஏற்கனவே மக்கள் வாழுமிடங்களில் மரங்களை எவ்வித குற்றவுணர்வுமின்றி அழித்து வரும் நிலையில், அரிதான குறுங்காடுகளாகக் காட்சிதரும் இவற்றையும் அழிக்கவிடக் கூடாது.

எனவே, மாவட்ட முழுவதும் உள்ள கோயில் வணங்களை முதலில் கணக்கெடுக்க வேண்டும். அந்தந்தப் பகுதியிலுள்ள மரங்கள், செடி, கொடி தாவரங்களுடன் சின்னச் சின்ன உயிரினங்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவற்றை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்.அவற்றைத் தொடர்ந்து அதே முறையில் சேதாரமில்லாமல் பராமரிப்பதற்கான பிரத்யேக சட்ட விதிகளை நிறைவேற்றி, கிராமங்கள் தோறும் அந்தந்த கிராம மக்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கிப் பாதுகாக்க வேண்டும் என்றனர். அரசுப்புறம்போக்குஎன்பதால் சில இடங்களில்சமுதாயக் கூடங்கள் போன்ற பொதுக் கட்டடங்களும் கட்டப்படுகின்றன. சில இடங்களில் கோயிலை பிரம்மாண்டமாக எழுப்புகிறோம் என்ற பெயரில் மரங்களை அழித்து அந்தக் குறுங்காட்டின்தனித்தன்மைகளை மாற்றிகான்கிரீட் கட்டடங்களைஎழுப்புகிறார்கள்.

Related Stories: