பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி சிறுமி கொலையான வழக்கில் விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ்

மதுரை: பாலியல் பலாத்காரம் செய்து, மின்சாரம் பாய்ச்சி சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே குரும்பபட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள், 16.4.2019ல் பாலியல் பலாத்காரம் செய்து, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருபானந்தனை வடமதுரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அரசுத்தரப்பின் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி கிருபானந்தனை விடுதலை செய்து கடந்த செப்.29ல் தீர்ப்பளித்தது.

அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யக்கோரி, தமிழகத்திலுள்ள சுமார் 3.50 லட்சம் சலூன் கடைகளை அடைத்து கடந்த அக்.9ம் தேதி போராட்டம் நடந்தது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தின. இதையடுத்து கிருபானந்தன் விடுதலையை எதிர்த்து, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், மனு குறித்து கிருபானந்தனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: