சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்ற 5 தீவிரவாதிகள் பெங்களூருவில் ஊடுருவல்: உளவு தகவலால் பரபரப்பு; என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற 5 பேர் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் கிடைத்து வருகிறது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் பெங்களூருவில் முகாமிட்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசவனகுடியில் தங்கி தீவிரவாத அமைப்புக்கு உதவியாக இருந்து வந்த அப்துல் ரகுமான் என்ற மருத்துவரை என்.ஐ.ஏ கைது செய்தது. அவரிடம் நடத்திய தகவலின் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  

இந்நிலையில் நேற்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் திடுக்கிடும் உளவு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிரியாவை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற 5 தீவிரவாதிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஊடுருவி இருப்பதாக தெரியவந்துள்ளது. பெங்களூருவில் மாயமான 7 இளைஞர்களை தீவிரவாதிகள் மூளை சலவை செய்து, குண்டு வெடிப்பில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 2 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் மட்டும் தற்போது உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு வங்கதேசத்தை சேர்ந்த ஹிஸ்புல் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த இக்பால் ஜமீர் என்பவர் உதவியுள்ளார். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமின்றி, பெங்களூரு ஓல்ட் மெட்ராஸ் சாலையில் தீவிரவாத பயிற்சி அளித்துள்ளார். மேலும் சவுதி அரேபியா வழியாக சிரியாவிற்கு அனுப்பட்டு 5 பேருக்கும் அங்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முக்கிய நோக்கம், அமெரிக்கா ராணுவம் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதத்தை எதிர்க்கும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதே என்று கூறப்படுகிறது. 5 பேரையும் கைது செய்யும் பணியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: