கர்நாடகாவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுமென அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஐ.டி. உள்பட தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கர்நாடக தொழில்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கன்னட வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக சரோஜினி மஹிஷி தலைமையில் மாநில அரசு கமிஷன் அமைத்தது. அந்த குழு அரசிடம் கொடுத்த அறிக்கையில், ‘தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு நூறு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும’ என்பது உள்பட பல பரிந்துரைகள் செய்தது.

இந்த அறிக்கை கொடுத்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல கால கட்டங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் கர்நாடக தொழில் விதிமுறைகள் சட்டம்-1961ல் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, சட்ட அமைச்சர் ஜே.சி.மாதுாசமி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஏ.சிவராம் ஹெப்பார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அமைச்சர் ஏ.சிவராம் ஹெப்பார் கூறும்போது, ‘‘மாநிலத்தில் தொழிற்சாலை தொடங்க முன்வரும் தனியார் நிறுவனங்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநில அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் வேலை வாய்ப்பு வழங்கும்போது கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வெளி மாநிலத்தினருக்கு வழங்கப்படுகிறது. அதை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக தொழில் விதிமுறைகள் சட்டம்-1961ல் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான சட்ட மசோதா வரும் சட்டபேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்’’ என்றார்.

Related Stories: