பொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ. 12,000 கோடி வட்டியில்லா கடன் வழங்குவதாகவும், அதனை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதித் தொகுப்பை கடந்த மே மாதம் அறிவித்தார். இதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் சிறு, குறு தொழில் துறையினர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்கள், நிலக்கரி, சுரங்கம், ராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து, பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறைக்கான திட்டங்களை வெளியிட்டார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது. இதை சீர் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனா தொற்றுநோயினால் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால், பொருட்களின் விநியோகத்துக்கான தடைகள் நீக்கப்பட்டிருந்தாலும், மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகளவு இல்லாததால், நுகர்வோர் தேவை குறைந்து விட்டது. எனவே, இதனை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்படும். இந்த கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படும். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பிறகு, மாநில அரசுகள் இதனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த நிதியில் ரூ.1,600 கோடி வடகிழக்கு மாநிலங்களுக்கும், ரூ. 900 கோடி உத்தரகாண்ட், இமாச்சல் மாநிலங்களுக்கும், ரூ. 2,000 கோடி மாநிலங்கள் முன்கூட்டியே அறிவித்த திட்டங்களுக்கும், மீதமுள்ள ரூ. 7,500 கோடி இதர மாநிலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. மாநிலங்கள் பெறும் இந்த கடன்தொகை முழுவதும் புதிய அல்லது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மூலதன திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிதியைக் கொண்டு மாநில அரசுகள் அதன் ஒப்பந்ததாரர்கள், வினியோகஸ்தர்களின் நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    

* அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில், ‘‘ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. இது, மாதம் ரூ.1,000 வீதம் 10 மாத தவணையாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் கூடுதலாக ரூ.19,000 கோடிக்கும், மாநில அரசுகள் இதனை செயல்படுத்தினால் அதன் ஊழியர்கள் ரூ.9,000 கோடிக்கும் பொருட்கள் வாங்குவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலங்களும், தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

* விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக கேஷ் வவுச்சர்

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு நான்காண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பு பயண சலுகை அளித்து வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, இனிவரும் சமீப காலத்தில் யாரும் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தாண்டு விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக கேஷ் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் 2021 மார்ச் 31ம் தேதிக்குள் இதனைப் பயன்படுத்தி 12 சதவீதத்துக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த தொகை கொண்ட ரூபே கார்டுகளும் கிடைக்கிறது. ஊழியர்கள் அவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரம், இந்த கேஷ் வவுச்சர்களை உணவகங்களில் பயன்படுத்த முடியாது.

Related Stories: