திட்டக்குடி அருகே தடுப்பு சுவர் உயரத்தை குறைத்ததால் பெரிய ஏரியில் தண்ணீர் வெளியேறியது; பல ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கி பாதிப்பு: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமங்கலம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் நீர் முழு கொள்ள ளவை எட்டும் பொழுது உபரி நீர் வெளியேறும்  இடத்தில் சுமார் எட்டு அடி உயரம் தடுப்புச்சுவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு இருந்தது. இதனால் பெருமளவு நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டு விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்பொழுது அந்த தடுப்புக் சுவரை இடித்துவிட்டு புதிதாக அதே இடத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த உபரி நீர் வெளியேறும் இடத்தில் 4 அடி உயரம் தடுப்புசுவர் கட்டப்பட்டு வருகிறது. தற்போது தொடர் மழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியும் ஏரியில் இருந்த மழை நீர் குறைந்த அளவு உயரத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் வழியாக அனைத்து நீரும் வெளியேறி விட்டது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி உள்ள சுமார் 25 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்த வரகு, சோளம் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் ஏன் தடுப்பு சுவர் உயரத்தை குறைத்தீர்கள்? என கேட்டபோது அவர்கள் அதனை காதில் வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பகுதியில் ஏற்கனவே இருந்ததுபோல் 8 அடி உயர தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: