சின்னசேலம், கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் நிழல் தரும் மரம் வளர்ப்பு

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் இருந்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறையினர் வளர்த்து வருகின்றனர். கச்சிராயபாளையத்தை மையமாக கொண்டு கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்திற்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வருகிறது. அது மட்டுமல்லாமல் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என ஆயிரக்கணக்கானவர்களும் சென்று வருகின்றனர்.

கச்சிராயபாளையம்- கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஏராளமான நிழல் தரும் புளிய மரங்கள் இருந்தது.

அந்த மரங்களை கடந்த ஓராண்டிற்கு முன்பு சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றப்பட்டு விட்டது. இதனால் அந்த இடம் காலியாக இருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தேவயிரக்கம் உத்தரவின்பேரில், உதவி கோட்டப்பொறியாளர் நீதிதேவன் மேற்பார்வையில் சாலைப் பணியாளர்களை கொண்டு கச்சிராயபாளையம் ஓடைக்காடு பகுதியில் இருந்து நல்லாத்தூர் வரை சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு கம்பி வலை சுற்றி பராமரித்து வருகின்றனர்.

அதைப்போல சின்னசேலம் செல்லும் சாலையில் அக்கராயபாளையம் காந்தி நகர் முதல் கடத்தூர் வரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது பருவ மழை பெய்து வருவதால் நெடுஞ்சாலைத்துறையினரால் நட்டு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் காய்ந்து போகாமல் செழித்து வளர்ந்து வருகிறது. இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமானால் பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இதையடுத்து கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: