திருச்சியில் உலக பிரியாணி தினத்தன்று 10 பைசாவுக்கு பிரியாணி: சமூக இடை வெளியின்றி குவிந்த மக்கள்

திருச்சி: உலக பிரியாணி தினத்தன்று திருச்சியில் உள்ள ஒரு கடையில் நேற்று 10 பைசாவுக்கு பிாியாணி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  உலக பிரியாணி தினம் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 10 மணிக்கு 10 பைசாவை கொடுத்து டோக்கன் வாங்கி பிரியாணி பெற்றுக்கொள்ளலாம் என்றும், முதலில் டோக்கன் பெறும் 100 பேருக்கே பிரியாணி வழங்கப்படும் என்றும் அந்த கடை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, அந்த பிரியாணி கடையில் நேற்று காலை 9 மணி முதலே பிரியாணி பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் 10 மணியளவில் முதலில் டோக்கன் வாங்கிய 100 பேருக்கு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.  நீண்ட வரிசையில் நின்ற மற்றவர்கள், பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரியாணி வழங்கும் கடை முன் கொஞ்சம் கூட சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காமல் குவிந்திருந்ததால், கொரோனா தொற்று  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: