மோடிக்கு மட்டும் 8,400 கோடியில் விமானம் ராணுவ வீரர்களுக்கு எளிதாக குண்டு துளைக்கும் வாகனமா?: ராகுல் ஆவேச கேள்வி

புதுடெல்லி: ‘நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் எளிதாக துப்பாக்கி குண்டுகள் துளைக்கக் கூடிய வாகனங்களில் செல்கின்றனர். இதுதான்  நியாயமா?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பயணிப்பதற்காக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து ₹8.400 கோடியில் 2 சிறப்பு  விமானங்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானங்கள், ஏவுகணைகளின்  தாக்குதல்களையும் தாங்கக் கூடியவை. அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும், ‘ஏர்போர்ஸ்-1’ விமானத்துக்கு இணையானவை.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், துப்பாக்கிகள்  குண்டுகள் எளிதாக துளைக்கக் கூடிய சாதாரண வாகனங்களில் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படுவதற்காக இப்படி செய்து விட்டு, பிரதமர்  மோடி பயணம் செய்வதற்காக ₹8,400 கோடியில் விமானங்கள் வாங்கப்படுகிறது. இதுதான் நீதியா?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

 மேலும், இந்த டிவிட்டர் பதிவுடன் ராணுவ வாகனத்தில் செல்லும்போது, புல்லட் புரூப் அல்லாத வாகனத்தில் தாங்கள் அனுப்பப்படுவது பற்றி  வீரர்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் அடங்கிய வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார். அதில் வீரர்கள், ‘நமக்கு மட்டும் சாதாரண  வாகனங்களை கொடுத்து விட்டு, உயர் அதிகாரிகள் மட்டும் புல்லட் புரூப் வாகனங்களில் செல்கின்றனர். நமது உயிரோடும், குடும்பத்தோடும் அவர்கள்  விளையாடுகின்றனர்,’ என்று பேசுகின்றனர்.

Related Stories: