வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப், அரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தினார். அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி ராகுல் காந்தி பேசினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘ராகுல் காந்தி டிராக்டரில் மெத்தையில் அமர்ந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார். அவருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது’ என்று சாடினார்.

முன்னதாக, டிராக்டர் பேரணி நடத்திய ராகுல் காந்தி டிராக்டரில் குஷன் சீட் அமைத்து பயணம் செய்தது தொடர்பாக, ‘டிராக்டரில் குஷன் இருக்கையில் அமர்ந்து ஊர்வலம் செல்வது போராட்டம் அல்ல’ என்று மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி கிண்டலாக பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணாக்கி ரூ.8,000 கோடியில் இரு விமானங்களை வாங்கியுள்ளார். அவரின் வசதிக்காக சொகுசு மெத்தைகள் அதில் அமைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து கேள்வி கேட்காதவர்கள் டிராக்டரில் நான் அமர்ந்திருக்கும் குஷன் சீட் குறித்து கேள்வி கேட்பது வியப்பாக இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

Related Stories: