முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது மகாராஷ்டிரா : என்-95 ரூ.50க்கு மேல் விற்கக்கூடாது முகக்கவசத்துக்கு விலை உச்சவரம்பு

மும்பை : கொரோன பரவலை தடுக்க, பாதுகாப்புக்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கு விலை உச்சவரம்பை மாநில அரசு நிர்ணயிக்கிறது. அதிகபட்சமாக, என்-95 மாஸ்க் 50 ரூபாய்க்கு மேல் விற்க தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்கும் நோக்கத்தோடு, கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் முக கவசத்துக்கு விலை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, என்-95 முக கவசத்துத்துக்கு அதன் தரத்துக்கேற்ப ரூ.19ல் இருந்து ரூ.50 வரை விலை நிர்ணயிக்கலாம் என்று செய்த பரிந்துரையை மகாராஷ்டிரா அரசு ஏ ற்றுக்கொண்டுவிட்டது. இது தொடர்பாக விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே தெரிவித்தார்.

 கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியதும், என்-95, இரு அடுக்கு மற்றும் 3 அடுக்கு முக கவசங்கள், மற்றும் சானிடைசர் ஆகியவற்றை மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் என அறிவித்தது. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும். இருந்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி பலர் இந்த முக கவசங்களை அதிக விலக்கு விற்று மோசடி செய்து வந்தனர். வீனஸ் ஹெல்த் சேப்டி பிரைவெட் லிமிட்டெட் மற்றும் மக்னம் ஹெல்த் சேப்டி பிரைவெட் லிமிட்டெட ஆகியன முக கவசங்கள் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள்.

 மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் 30ம தேதிவரை முக கவசங்கள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் மக்னம் நிறுவனம் என்-95 முக கவசத்தின் விலையை ரூ.40ல் இருந்து ரூ.175 வரை அதிகரித்ததாக மகாராஷ்டிரா அரசு அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த நிறுவனம் இதே காலகட்டத்தில் 3 அடுக்கு முக கவசத்திந் விலையை ரூ.6ல் இருந்து ரூ.10 ஆக அதிகரித்ததும் தெரியவந்துள்ளது. வீனஸ் நிறுவனம் கொரோனாவுக்கு முன்ரூ.43.5 ஆக இருந்த என்-95 முக கவசத்தின் விலையை மார்ச் மாதம் ரூ.150 ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த விலை ரூ.172 ஆக அதிகரிக்கப்பட்டதாக நிபுணர் குழு கூறியுள்ளது. வேல்வ்ட் மற்றும் வேல்வ்ட் இல்லாத முக கவசத்தின் விலையை வீனஸ் நிறுவனம் மார்ச் மாதம் அதிகரிக்கவில்லை. ஆனால் மே மாதம் இதன் விலை 300 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. அதாவது ரூ.60.8ல் இருந்து ரூ.250 ஆக அதிகரிக்கப்பட்டதாக நிபுணர் குழு கூறியுள்ளது.

 முக கவசம் கொள்ளை விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு மேலே சொல்லப்பட்ட நிபுணர் குழுவை நியமித்தது. இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து மகாராஷ்டிரா அரசிடம் அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையில், என்-95 முக கவசத்தின் விலையை அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.19ல் இருந்து ரூ.50 வரை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரு மற்றும் மூன்றடுக்கு முக கவசங்களின் விலையை ரூ.3ல் இருந்து ரூ.4 வரை நிர்ணயிக்கலாம் என்றும் அறிக்கையில் பரிந்துரை ெசய்யப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையை மகாராஷ்டிரா அரசு ஏற்றுக்கொண்டு விட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே தெரிவித்தார். விலை நிர்ணயம் தொடர்பான அரசின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: