சென்னையில் இருந்து மருந்து பொருட்கள் பெயரில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள் சிக்கியது: வியாபாரி கைது

சென்னை: மருந்து பொருட்கள் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு சென்னையில் இருந்து சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புடைய 455 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்ப வந்த கொரியர் பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, மதுரையிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு  மருந்து பொருட்கள் என்று பதிவு செய்யப்பட்ட 2 பார்சல்கள்  வந்திருந்தன. சுங்கத் துறையினருக்கு அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் பார்சல்களை தனியாக எடுத்து ஆய்வு செய்தனர். அந்த பார்சல்கள் மதுரை போலி முகவரியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பார்சல்களை பிரித்து பார்த்து சோதனை நடத்தினர். அதனுள் ஆழ்ப்ரா ஜோலம் மற்றும் லோரா ஜீப்பன் என்ற வகை மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகளை வலி நிவாரணியாகவும், தூக்கத்திற்கும் மிகவும் அளவோடு பயன்படுத்த வேண்டும்.  எல்லை மீறினால் கொடிய பக்க விளைவுகள் ஏற்படுத்தும். மாரடைப்பு, கேன்சர் உள்ளிட்ட மரணத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் இது நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை போதைக்காக ரகசியமாக பயன்படுத்துகின்றனர்.

இந்த வகை மாத்திரைகள் 455 இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு பல லட்சம்  என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறையினர் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பல லட்சம் மதிப்புடைய 455 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த மருந்துப்பொருட்கள் ஏற்றுமதியாளர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: