ஐபிஎல் வீரரை அணுகிய சூதாட்ட தரகர் பிடிபடுவார்... பிசிசிஐ உறுதி

ஐபிஎல் போட்டியின் நடப்புத் தொடர் யுஏஇயில் நடக்கிறது. அங்கு ஐபிஎல் வீரர் ஒருவரை அணுகிய மர்ம ஆசாமி, ‘சூதாட்டத்தில் ஈடுபடுவது, அதனால் வரும் பலன்கள்’ குறித்து மேலாட்டமாக பேசியுள்ளார். அதனால் உஷாரான வீரர், உடனடியாக மர்ம ஆசாமியை விட்டு விலகியுள்ளார். கூடவே தனது அணி நிர்வாகத்தின் மூலம் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளார். அதனையடுத்து பிசிசிஐயின் ‘ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) தலைவரும், ராஜஸ்தானின் முன்னாள் டிஜிபியுமான அஜித் சிங் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அஜித் சிங், ‘வீரரை தொடர்பு கொண்ட ஆசாமியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு சிறிது அவகாசம் தேவை’ என்று கூறியுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வீரர், அவர் எந்த அணியை சேர்ந்தவர் என்ற விவரங்களை பிசிசிஐ, ஏசியு வெளியிடவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எல்லா வீரர்களும் ஆன்லைன் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். கூடவே சூதாட்டங்களை, முறைகேடுகளை தடுக்க இங்கிலாந்தை சேர்ந்த ‘ஸ்போர்ட்ராடர்’ என்ற நிறுவனமும் பணியாற்றி வருகிறது. இந்த இரண்டையும் மீறிதான் மர்ம ஆசாமி வீரரை அணுகி சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளார்.

Related Stories: