பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் குவித்தோவா: 19 வயது சின்னர் அசத்தல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் சீன வீராங்கனை ஷுவாய் ஸாங்குடன் நேற்று மோதிய குவித்தோவா (7வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டிலும் ஸாங்கின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 6-2, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அலெக்சாண்டர் அதிர்ச்சி: நோவக் ஜோகோவிச்சுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய 19வயது வீரர் என்ற பெருமையை இத்தாலியின் ஜானிக் சின்னர் பெற்றுள்ளார். இந்த தொடரில் 12முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் அவர் கால் இறுதியில் மோத உள்ளார்.

இத்தாலியை சேர்ந்த சின்னர் (19), கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடந்த ஆண்டுதான் அறிமுகமானார். விம்பிள்டனில் தகுதிச்சுற்றிலேயே வெளியேறினார். யுஎஸ் ஓபனில் 2019, 2020ல் முதல் சுற்றுடன் வெளியேறினார். ஆஸ்திரேலியா ஓபனில் இந்த ஆண்டு 2வது சுற்றை எட்டினார். இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் தகுதிச்சுற்றில் வென்று, பிரதான சுற்றில் முதல், 2வது, 3வது சுற்றுகளை படிப்படியாக தாண்டி வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (7வது ரேங்க்) மோதினார். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவர் என்பதாலும், சமீபத்தில் முடிந்த யுஎஸ் ஓபன் போட்டியில் பைனல் வரை முன்னேறியவர் என்பதாலும் அலெக்சாண்டர்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரை எளிதில் எதிர்கொண்ட ஜானிக் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். அடுத்த சுற்றையும் 6-3 என ஜானிக் கைப்பற்றி அசத்தினார். அதனால் 3வது செட்டில் வீறுகொண்டு எழுந்த அலெக்சாண்டர் 4-6 என்ற கணக்கில் வென்றார். ஆனால் 4வது செட்டில் மீண்டும் வேகம் காட்டிய ஜானிக் 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார். 14 ஆண்டுகளுக்கு பிறகு 19வயது வீரர் ஒருவர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய சாதனையையும் ஜானிக் நிகழ்த்தினார். இதற்கு முன் 2006ம் ஆண்டு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 19 வயதில் பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: