நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதா? பி.டி.அழகரசன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாநில நிர்வாகி

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்த நிலையில், தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில், ஊராட்சிகளுக்கான தேர்தல், கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடந்தது. புதிய ஊராட்சித் தலைவர்கள் ஜனவரி 4ம் தேதி பதவியேற்றனர். இதனால் கிராமங்களின் முதுகெலும்பான ஊராட்சிகளுக்கு புத்துயிர் கிடைத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமாக மக்கள்  பணியாற்ற ஆயத்தமாகினர். ஆனால் 9 மாதங்களாக மத்திய, மாநில அரசுகள் ஊராட்சிகளுக்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது பெருத்த வேதனைக்குரியது.  

ஊராட்சி தலைவர்களுக்கு ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பொதுசெலவு உள்ளிட்டவைகளுக்கு வங்கி கணக்குகளில் நிதி ஒதுக்கப்படும். இவற்றை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஒப்புதலுடன் ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள், தலைவர்களின் வங்கிக்கணக்கில் சேர்ப்பார்கள். இதில் பொதுநிதி என்ற ஒதுக்கீட்டில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். சம்பள நிதி  என்ற ஒதுக்கீட்டில் ஊராட்சி செயலர், தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், நூலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

 இந்த நிதியில் மத்திய அரசின் பங்களிப்பு 70 சதவீதமும், மாநில அரசின் பங்கு 30 சதவீதமும் இருக்கும். ஆனால் இரண்டு அரசுகளுமே கடந்த 9 மாதங்களாக போதுமான நிதியை எந்த ஊராட்சிக்கும் ஒதுக்கவில்லை. இதனால் தற்போதுவரை தலைவர்கள் சொந்த பணத்தை செலவு செய்து சில தேவைகளை மட்டுமே செய்து கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி  திட்டத்தின் கீழ் நடக்கும் ஓடைகள் தூர் வாருதல், தடுப்பணைகள் கட்டுதல், ஆட்டுக்கொட்டாய், மாட்டுக்கொட்டாய் அமைத்தல் போன்ற பணிகளை ஆளுங்கட்சி ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே அதிகாரிகள் ஒதுக்கிக் கொடுக்கின்றனர்.

இதே போல் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும், தங்கள் கட்சி சார்ந்தவர்கள், தலைவர்களாக உள்ள  ஊராட்சிகளுக்கே ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் அடிப்படை வசதிகளுக்கு செலவிடாமல் பள்ளிகளுக்கு பீரோ, மேஜை, நாற்காலி வாங்குதல், உயர்மின்கோபுர விளக்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கு செலவிடுகின்றனர். இவற்றை மொத்தமாக வாங்குவதற்கு ஒப்பந்தம் போடும் போது, 40சதவீத கமிஷன் எம்எல்ஏக்களுக்கு கிடைக்கிறது என்பதே இதற்கான காரணம். தற்போதைய நிலவரப்படி 65 சதவீத ஊராட்சிகளில் எதிர்க்கட்சியினரே தலைவராக உள்ளனர். இந்த ஊராட்சிகளில் கடந்த 9 மாதங்களில் 10சதவீதம் கூட, மக்கள் நலன் சார்ந்த அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலையே உள்ளது.

இதேபோல் கொரோனா தொற்று பரவிய ஆரம்ப காலகட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஒற்றை இலக்கத்தில் பாதிப்புகள் இருந்தது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் கொரோனா தடுப்புக்கான மாஸ்க், சானிடைசர், மருத்துவமுகாம், தூய்மை பணிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் அரசு வழங்கியது. ஆனால் தற்போது பாதிப்புகள் பல்கிப் பெருகி அசுர வேகத்தில் உள்ளது. இந்த நேரத்தில் தூய்மையும், சுகாதார மேம்பாடுகளும் மிகவும் அவசியம். ஆனால் கடந்த 4 மாதங்களாக கொரோனா தடுப்பு நிதி என்று ஒரு ரூபாயை கூட மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காமல் இருப்பது துரதிஷ்டமானது.

ஊராட்சிகள் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்புகள் என்று மகாத்மாகாந்தி கூறியுள்ளார். இங்கு அரசியல் கலக்காமல் தங்களுக்கான பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, பணியாற்ற வாய்ப்பளிக்கின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துடிப்புடன் பல இளைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் அரசு போதிய நிதியை ஒதுக்காததால் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் பாகுபாடு காட்டினாலும் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு, பாரபட்சம் இல்லாமல் நிதியை ஒதுக்க வேண்டும். அப்போது தான், குற்றுயிராக கிடக்கும் தமிழக ஊராட்சிகளுக்கு புத்துயிர் கிடைக்கும். ஆளுங்கட்சியினர் பாகுபாடு காட்டினாலும்  அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு, பாரபட்சம் இல்லாமல் நிதியை ஒதுக்க  வேண்டும். அப்போது தான், குற்றுயிராக கிடக்கும் தமிழக ஊராட்சிகளுக்கு புத்துயிர் கிடைக்கும்.

* பல மாதங்களாக நிதியின்றி நிர்வாகம் நடத்துவது எப்படி? தர்மன் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர்

திருச்சி மாவட்டத்தில் 18 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 14 ஒன்றிய குழு தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், 300க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தலைவர் திமுக சார்பில் தேர்வாகி உள்ளோம். ஊராட்சி அமைப்புகளான பஞ்சாயத்து யூனியன், ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதமாக அரசு நிதி வரவில்லை. தமிழக அரசின் எஸ்எப்சி மூலம் ஒவ்வொரு மாதமும் அரசு நிதி வழங்கப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.70-80 லட்சம், யூனியன்களுக்கு ரூ.20-22 லட்சம், பஞ்சாயத்துகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்படும்.

இந்த நிதி மூலம் மக்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான பணிகள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அதுவும் இவர்களுக்கான ஊதியம் குறைவுதான். ஆனாலும் இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். காரணம் கேட்டால் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என கூறுகின்றனர். நிதி வராவிட்டால் நிர்வாகத்தை எப்படி நடத்துவது. கடந்த 11.1.2020ம் ஆண்டில் பதவி ஏற்றோம். மார்ச் முதல் கொரோனா தடுப்பு என கூறி நிதி வழங்கப்படவில்லை. தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் சரிவர கொடுக்கவில்லை என்றால் எப்படி தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். பணி செய்யவில்லை என்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும். இவ்வளவு பிரச்னைகள் உள்ளதை அரசு கண்டு கொள்ளவில்லை. நிதி இல்லாததால் பொதுமக்களுக்கு பஞ்சாயத்தில், ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளை செய்து தரமுடியவில்லை. தற்போது மழை காலம் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை செய்வதற்கு கூட நிதி இல்லை.

பொதுவாக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள 9 நெ. கணக்கில் 14 மற்றும் 15வது நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் பணம் இருக்கும். இதனை மாவட்ட ஊராட்சி, பஞ்சாயத்து, யூனியனில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பணி மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பயன்படுத்த வேண்டும். ஆனால் கடந்த மாதம் இந்த 9நெ. கணக்கில் உள்ள நிதியை மாவட்ட நிர்வாகம் 7 நெ. கணக்கில் மாற்றம் செய்து ஊதியம் மற்றும் பணிகள் செய்து கொள்ள உத்தரவிட்டது. இது முற்றிலும் தவறானது. 7 நெ. கணக்கிற்கு அனுப்ப வேண்டிய தொகையை அரசு வழங்க வேண்டும். கொரோனா காரணம் காட்டி மக்கள் பணிகள் செய்வதை தடுக்க கூடாது. மேலும், பஞ்சாயத்து பணிக்களுக்கான டெண்டரை பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகங்களில் நடத்த வேண்டும். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பேக்கேஜ் முறையில் டெண்டர் விடுகின்றனர்.

இதனால் பஞ்சாயத்திற்கு அதிகாரம் இல்லாமல் போய் விடுகிறது. எந்த காரணத்திற்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதோ அது இல்லாமல் போய்விடும். இதனை எதிர்த்து திருச்சி மாவட்டத்தில் ஒரு சில பஞ்சாயத்து தலைவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் பஞ்சாயத்திற்கான அதிகாரம் பறிக்கப்படுகிறது என வழக்கு தொடர்ந்துள்ளனர். விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளாமல் ஏதேனும் ஒரு காரணம் கூறி தட்டி கழிக்கும் அதிமுக அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.  பஞ்சாயத்து பணிக்களுக்கான டெண்டரை பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகங்களில் நடத்த வேண்டும். ஆனால்  

சட்டத்திற்கு புறம்பாக திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பேக்கேஜ் முறையில்  டெண்டர் விடுகின்றனர்.

Related Stories: