ஷார்ஜா: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு சீசனில் மும்பை, ஐதராபாத் இரு அணிகளும் தங்களின் 5வது லீக் ஆட்டத்தில் நேற்று களமிறங்கின. மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், அவருக்கு பதிலாக சந்தீப் ஷர்மா சேர்க்கப்பட்டார். கலீல் நீக்கப்பட்டு சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், டி காக் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 6 ரன் மட்டுமே எடுத்து சந்தீப் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட, மும்பை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து டி காக் - சூரியகுமார் யாதவ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது.
சூரியகுமார் 27 ரன் (18 பந்து, 6 பவுண்டரி) எடுத்து கவுல் பந்துவீச்சில் நடராஜன் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து டி காக்குடன் இஷான் கிஷண் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை ஸ்கோரை உயர்த்தினர். டி காக் 32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். டி காக் - இஷாண் ஜோடி 78 ரன் சேர்த்து அசத்தியது. டி காக் 67 ரன் (39 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரஷித் கான் பந்துவீச்சில் அவரிடம் பிடிபட்டார். இஷான் 31 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 28 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விடைபெற்றனர். கடைசி கட்டத்தில் போலார்டு, குருணல் பாண்டியா இருவரும் சிக்சர்களாகப் பறக்கவிட்டு ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தனர். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. போலார்டு 25 ரன் (13 பந்து, 3 சிக்சர்), குருணல் 20 ரன்னுடன் (4 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை இன்னிங்சில் மொத்தம் 14 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் பறந்தன. கடைசி 4 ஓவரில் மட்டும் அந்த அணிக்கு 59 ரன் வாரி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. 200+ எடுத்த போட்டிகளில் மும்பை அணி தோற்றதில்லை என்ற வரலாற்றை ஐதராபாத் இம்முறை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்புக்கிடையே வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். நம்பிக்கையுடன் அடித்து விளையாடிய பேர்ஸ்டோ 25 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் ஹர்திக் வசம் பிடிபட்டார். வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி பொறுப்புடன் விளையாடி 2வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. மணிஷ் 30 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பேட்டின்சன் வேகத்தில் போலார்டு வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.அடுத்து வந்த வில்லியம்சன் 3 ரன், பிரியம் கார்க் 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறியது, ஐதராபாத் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 34 பந்தில் அரை சதம் அடித்த வார்னர், 60 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பேட்டின்சன் வேகத்தில் இஷானிடம் பிடிபட்டார். தேவைப்படும் ரன் ரேட் பூதாகரமாகி மிரட்டிய நிலையில் அப்துல் சமத் 20, அபிஷேக் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரஷித் கான் 3 ரன், சந்தீப் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட், பேட்டின்சன், பூம்ரா தலா 2, குருணல் 1 விக்கெட் வீழ்த்தினர். போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியுடன் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.