பீகாரில் தொகுதி பங்கீட்டில் மோதல் பாஜ கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி விலகியது: 243 தொகுதிகளிலும் தனித்து போட்டி

புதுடெல்லி: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டணியில் பாஜ - ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதிப்பங்கீடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. பீகார் சட்டப் பேரவைக்கு வரும் 28, நவம்பர் 3, 7ம் தேதிகளில், 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் களைகட்டி வருகிறது.

இம்மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைமையில் உள்ள மெகா கூட்டணியில் நேற்று முன்தினம் தொகுதிப் பங்கீடு முடிந்தது. அதில், காங்கிரசுக்கு 70 இடங்களும், வால்மீகி நகர் மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டன. ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிடுகிறது. இது தவிர, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் நேற்று தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 இடங்களும், பாஜ.வுக்கு 121 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இக்கூட்டணியில் கடந்த தேர்தலில் முக்கிய அங்கம் வகித்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானில் லோக் ஜனசக்தி 42 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால், அதற்கு பாஜ.வும், ஐக்கிய ஜனதா தளமும் மறுத்து விட்டன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கூட்டணியில் இருந்து வெளியேற அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இக்கட்சியின் தலைவரும், பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் நேற்று அறிவித்தார். மேலும், 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால், இம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* நிதிஷ் தலைமை ஏற்க மாட்டோம்

லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் நேற்று அளித்த பேட்டியில், ``நிதிஷ் குமார் தலைமையை ஏற்க மாட்டோம். அதே நேரம், மத்திய ஆட்சியில் பாஜ.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். கட்சியின் எம்பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் தலைமை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவார்கள்,’’ என்றார்.

Related Stories: