ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே இயக்கப்படாத பேருந்துகள்: மக்கள் கடும் அவதி

திருப்போரூர்: செங்கல்பட்டு பணிமனையில் இருந்து செங்கல்பட்டு - மானாம்பதி இடையே முள்ளிப்பாக்கம், சென்னேரி வழியாக தடம் எண் டி 75, திருநிலை, ஒரகடம், அருங்குன்றம் வழியாக தடம் எண் டி11, எச்சூர், புலியூர், திருக்கழுக்குன்றம் வழியாக தடம் எண் டி.21 ஆகிய மூன்று நகரப்பேருந்துகள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. அதேபோன்று கல்பாக்கம் பணிமனையில் இருந்து திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே தடம் எண் 108 எம், 119பி, 19டி ஆகிய மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புற மக்கள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு வரை கொண்டு செல்வதற்கு இந்த பேருந்துகளையே நம்பி இருந்தனர்.

மேலும் சிறு வியாபாரிகள், பால், தயிர் விற்பனையாளர்கள், சென்னை போன்ற புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்த இந்த நகரப் பேருந்துகள் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் அமல்படுத்தப் பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டன. 6 மாதங்கள் முடிந்து தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை. செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தடம் எண் 108ஏ என்ற பேருந்து மட்டும் 4 நாட்கள் இயக்கப்பட்டது. ஆனால், போதிய வருவாய் இல்லை என்று காரணம் கூறி அந்த ஒரே பேருந்தும் நிறுத்தப்பட்டது.

தற்போது செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து 2 தனியார் பேருந்துகள் மட்டும் மானாம்பதி வழியாக திருப்போரூர் வரை இயக்கப்படுகிறது. அவற்றில் கொரோனா அச்சம் காரணமாக குறைந்த பயணிகளே அனுமதிக்கப்படுகின்றனர். சரியான கட்டணம், விரைவான சேவை என்ற வகையில் மக்களுக்காக இயக்கப்பட்ட இந்த பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டதால் இதுபோன்ற சிறு விவசாயிகள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

ஆகவே, கிராமப்புற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நகரப்பேருந்து சேவையை செங்கல்பட்டு மற்றும் கல்பாக்கம் பணிமனை நிர்வாகங்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து அனுமந்தபுரம், சென்னேரி, பெருந்தண்டலம், கரும்பாக்கம் வழியாக திருப்போரூர் வரை செங்கல்பட்டு பணிமனையில் இருந்து நகரப்பேருந்து இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிங்கபெருமாள் கோயில் மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் ஆகிய இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களையும் இணைத்தது போல் இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: