புழல், செங்குன்றம் பகுதியில் தொடரும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள்: பீதியுடன் வாழ்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூடுதல் போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

புழல்:புழல் குற்றப்பிரிவு காவல் எல்லை, செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன், செயின் பறிப்பு மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுகுறித்து புழல், செங்குன்றம் காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தும் குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், நகை, பணம் கொள்ளை, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியுடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே புழல் செஙகுன்றம் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் எனறு பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் கூறுகையில், இரண்டு காவல் நிலையங்களிலும் குற்றப்பிரிவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட குறைவான எண்ணிக்கையிலான போலீசாரே இப்போதும் பணியாற்றுகின்றனர். தற்போது ஒரு காவல் நிலையத்தில் ஆறு காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் இவர்கள் எழுத்துப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ரோந்து பணியில் செல்வதற்கு கூட போதுமான காவலர்கள் இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குறைந்தது 50க்கும் மேற்பட்ட காவலர்களை  நியமித்தால் மட்டுமே குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காவல் நிலையங்களில் உள்ள குற்றப்பிரிவுக்கு அதிகப்படியான காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார். 

Related Stories: