பிரியம் கார்க் - அபிஷேக் பொறுப்பான ஆட்டம் சூப்பர் கிங்சை அடக்கியது சன்ரைசர்ஸ்: 4வது இடத்துக்கு முன்னேறியது

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 4வது இடத்துக்கு முன்னேறியது.நடப்பு சீசனின் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடத்தில் பின்தங்கியிருந்த சென்னை, ஐதராபாத் அணிகள், நேற்று தங்களின் 4வது லீக் ஆட்டத்தில் களமிறங்கின. இரு அணிகளுமே தலா 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்திருந்ததால், இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்தி முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டின. சிஎஸ்கே அணியில் எம்.விஜய், ருதுராஜ், ஜோஷ் நீக்கப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர், டுவைன் பிராவோ, அம்பாதி ராயுடு இடம் பிடித்தனர். சன்ரைசர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். வார்னர், பேர்ஸ்டோ இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பேர்ஸ்டோ டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து, வார்னருடன் மணிஷ் பாண்டே இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக வார்னர் நிதானம் காட்ட, மறுமுனையில் மணிஷ் துடிப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது.பெரிய ஸ்கோர் அடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மணிஷ் 29 ரன் எடுத்து (21 பந்து, 5 பவுண்டரி) தாகூர் பந்துவீச்சில் சாம் கரன் வசம் பிடிபட்டார்.திடீர் சரிவு: சாவ்லா வீசிய 11வது ஓவரின் 5வது பந்தில் வார்னர் ஆட்டமிழக்க (28 ரன், 29 பந்து, 3 பவுண்டரி), 9 ரன் எடுத்திருந்த வில்லியம்சன் அடுத்த பந்திலேயே ரன் அவுட்டானது ஐதராபாத் அணிக்கு பேரிடியாக அமைந்தது. 10.4 ஓவரில் 2 வி    க்கெட் இழப்புக்கு 69 ரன் என்ற ஓரளவு கவுரவமான நிலையில் இருந்து, 11 ஓவரில் 69 ரன்னுக்கு 4 விக்கெட் என ஐதராபாத் திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் இளம் வீரர்கள் பிரியம் கார்க் - அபிஷேக் ஷர்மா இணைந்து நம்பிக்கையுடன் விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்து அசத்தியது. அபிஷேக் 31 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹர் பந்துவீச்சில் தோனி வசம் பிடிபட்டார். அபாரமாக விளையாடிய கார்க் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் அந்த அணி 64 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கார்க் 51 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), அப்துல் சமத் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் சாஹர் 2, தாகூர், சாவ்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டு பிளெஸ்ஸி, வாட்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். வாட்சன் 1 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து டு பிளெஸ்ஸி - ராயுடு ஜோடி சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்த போராடியது.

 டூ பிளெஸ்ஸி 22 ரன் (19 பந்து, 4 பவுண்டரி), ராயுடு 8 ரன் (9 பந்து, 1 பவுண்டரி), ஜாதவ் 3 ரன்  எடுத்து ஆட்டம் இழந்தனர். 8.2 ஓவரிலேயே அடுத்தடுத்து இந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே சுருண்டது சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக களம் இறங்கிய தோனி, ஜடேஜா ரன்களை குவிக்க போராடினர். ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் என அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும், அரை சதம் அடித்த நிலையில், நடராஜன் பந்தில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களமிறங்கி தோனியுடன் ஜோடி சேர்ந்த சாம் கரண் 15 ரன் (5 பந்து, 2 சிக்ஸர்), தோனி  கடைசி நேரத்தில்  அதிரடியாக விளையாடி 47 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அனைத்து ஓவர்களும் முடிந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

Related Stories: