வாட்ஸ்அப் குழு மூலம் துணி விற்பதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி: பலே ஆசாமி கைது

பெரம்பூர்,: வாட்ஸ்அப் குழு மூலம் குறைந்த விலையில் துணிகள் விற்பதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தவரை  போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி ஏகாந்தி புரத்தை சேர்ந்த இந்திரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.  அதில், வாட்ஸ்அப் குழு மூலம் என்னை தொடர்பு கொண்ட ஒருவர், குறைந்த விலையில் துணிகள் விற்பனை செய்வதாக கூறி புகைப்படங்களை  அனுப்பினார்.  இதை நம்பிய நான் உள்ளிட்ட பல பெண்கள் அந்த குழுவில் சேர்ந்து, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தினோம். ஆனால், அதன்படி  துணி வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே, மோசடி ஆசாமி மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

போலீசார் விசாரணையில், மேற்கு தாம்பரம் கல்யாண் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (42) மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து  விசாரித்தபோது, பேஸ்புக் மூலம் பெண்களின் தொலைபேசி எண்ணை பெற்று, வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, விலை உயர்ந்த துணிகளை  குறைந்த விலையில் விற்பதாக விளம்பரம் செய்ததும், குறிப்பிட்ட வாட்ஸ்அப் குழுவில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்தவுடன், வங்கி மூலம்  பணத்தை பெற்று ஏமாற்றியதும் தெரிந்தது.

 இவ்வாறு சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 6 சிம் கார்டுகள்  உள்ளிட்டவற்றை  பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அறிமுகம் இல்லாத நபர்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் மூலம் குறைந்த விலையில் பொருட்களை தருவதாக கூறி வங்கியில் பணம்  செலுத்துமாறு கூறினால் அதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனபோலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: