16ம்தேதி நடக்கும் 2வது பிரம்மோற்சவத்தின்போது மாடவீதிகளில் பவனி வருகிறார் ஏழுமலையான்: பக்தர்களுக்கும் அனுமதி; தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம்தேதி 2வதாக நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தில் சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி வருவார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமாக நான்கு மாடவீதிகளில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி வரும் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமலையில் 2 பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16ம்தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 5ம்நாள் (அக்.20ம்தேதி) கருட சேவை, 6ம் நாள் (அக்.21ம் தேதி) மாலை புஷ்ப பல்லக்கு, 23ம்தேதி தங்க ரதத்தில் சுவாமி வீதி உலா, 24ம்தேதி தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சம் நிறைவு பெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் வழக்கம்போல் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலையிலும் இரவிலும் மாட வீதிகளில் வலம் வருவார் என்றும், சுவாமியை ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் தேவஸ்தானம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேவஸ்தான நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரம்மோற்சவத்தின்போது காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் சுவாமியை தரிசிக்கலாம். மாட வீதியில் பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னதாக உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்னபிரதாசமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பவுர்ணமி கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து வரும் 20ம்தேதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 5ம்நாள் மற்றும் 31ம்தேதி பவுர்ணமியை ஒட்டியும் கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. அதாவது இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏழுமலையான் 3 முறை கருட வாகனத்தில் தரிசனம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: