தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்

சென்னை: வங்கக் கடலில் தற்போது காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி நிலை கொண்டு இருப்பதால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதனால், ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், அனேக இடங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாலத்தீவு, தெற்கு வங்கக் கடல், அந்தமானில் அனேக இடங்கள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாளில் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் மேற்கண்ட இடங்களில் முன்னதாகவே பருவமழை தொடங்க உள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்தம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 160மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் 140மிமீ, கரூர், திருச்சி விமான நிலையம் 130மிமீ, சின்னக் கல்லார், சமயபுரம் 120 மிமீ, சேந்தமங்கலம், நாமக்கல் 110 மிமீ, விராலிமலை, ராமநாதபுரம் 100 மிமீ, சிவகங்கை, ஏற்காடு, சென்னிமலை 90 மிமீ, ஒகேனக்கல், சங்ககிரி, சேலம், 80மிமீ மழை பெய்துள்ளது. இதுதவிரவும் அனேக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அந்த காற்றழுத்தம் இன்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிக கனமழை இன்றும், நாளையும் பெய்யும் வாய்ப்புள்ளது. கனமழை முதல் மிக கனமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதேபோல, அரபிக் கடல் பகுதியிலும் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. மேற்கண்ட இரண்டு காற்றழுத்தங்கள் காரணமாக தென்னிந்தியப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேநிலை நாளையும் நீடிக்கும்.

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மேலும் வலுப்பெற்று வட கிழக்கு திசையில் நகரும். இது தவிர, இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலை என்பது இயல்பை ஒட்டியே இருக்கும். 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதாலும், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: