கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது நண்பர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் மோடி டுவிட்.!!!

டெல்லி: அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனாவில் இருந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரம்,  கிளீவ்லேண்டில் நடந்த பிடன் உடனான விவாதம், மினசோட்டாவில் நடந்த பிரசார பேரணி ஆகியவற்றில் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் உடன் அதிபர் டிரம்ப் பயணித்ததார்.  இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது.  

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை உடனடியாக தொடங்குகிறோம்.  இருவரும் இணைந்து இதனை எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணம்பெற வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  எனது நண்பரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணம் பெறவும், நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: