ஊத்துக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் மறியல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால், நேற்று காலை நெல் மூட்டைகளுடன் வந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஊத்துக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில், ஊத்துக்கோட்டை, தாராட்சி, தொம்பரம்பேடு, பேரெண்டூர், பனப்பாக்கம் உள்பட சுற்றுவட்டார கிராம விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வருவர். இந்நிலையில், நாளொன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் எடுத்த கொள்முதல் நிலையத்தில் படிப்படியாக குறைந்து, தற்போது, 500 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென நெல் கொள்முதல் நிலையத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால், தாங்கள் டிராக்டரில் எடுத்து வந்த நெல் மூட்டைகளை விவசாயிகள் சாலையில்நிறுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து, நேற்று காலை திடீரென நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்து வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.

பின்னர், அங்கிருந்த மேலாளர், நெல் வைப்பதற்கு இடமில்லாததால்தான் தற்சமயம் கொள்முதல் நிலையத்தை மூடி வைத்திருக்கிறோம். தற்போது, மத்திய அரசு நெல் விலையை கூடுதலாக நிர்யணம் செய்ய உள்ளது. ஆகவே, 3 நாட்களுக்கு பிறகு விலையை நிர்ணயம் செய்த பிறகுதான் வாங்குவோம் என மேலாளர் தெரிவித்தார். அதன்பிறகு, 3 டிராக்டர்களை நெல் கொள்முதல் நிலையத்துக்குள் நிறுத்திவிட்டு, மற்ற விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் கிளம்பி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: