கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.4.34 லட்சம் கோடி கடன் வாங்க அரசு முடிவு: நிதியமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் 2ம் அரையாண்டில், ரூ.4.34 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய பொருளாதாரம் மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதை, பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்கள் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும், ஏற்கனவே கணித்திருந்த இந்திய பொருளாதார வளர்ச்சியை மறு மதிப்பீடு செய்துள்ளன. அவற்றின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரம் கடும் பாதிப்பை அடையும் என்று கூறியுள்ளன. கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

இதனை ஈடு செய்ய, நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில், கடன் பத்திர வெளியீடுகள் உள்ளிட்டவை மூலம் மத்திய அரசு ரூ.7.66 லட்சம் கோடி திரட்டியுள்ளது. சந்தையில் நிதி திரட்டும் திட்டத்தில், மத்திய அரசு ஏற்கனவே பட்ஜெட்டில் நிர்ணயித்திருந்த இலக்கை சுமார் 50 சதவீதம் உயர்த்தி, ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயித்தது. இந்த புதிய இலக்கில், ஏற்கனவே திரட்டிய ரூ.7.66 லட்சம் கோடி போக, இன்னும் ரூ.4.34 லட்சம் கோடியை பத்திர வெளியீடுகள் மூலம் திரட்டிக் கொள்ளலாம். இந்நிலையில், 2ம் அரையாண்டில் மேற்கண்ட ரூ.4.34 லட்சம் கோடியை கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசு திரட்ட உள்ளதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், ‘‘மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி இலக்கை தாண்டி கடன் வாங்காது,’’ என்றார்.

* நிதிப்பற்றாக்குறை ரூ.8.7 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கையும் தாண்டி 109.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மேற்கண்ட காலக்கட்டத்தில் மத்திய அரசுக்கு நிகர வரி வருவாய் ரூ.2.84 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், ரூ.12.5 லட்சம் கோடி செலவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதே நிலை தொடர்ந்தால் நிதியாண்டு முடிவில் இந்த பற்றாக்குறை 8 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: